/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திருவள்ளூர் புதிய பேருந்து நிலைய பணி மந்தம்:நெரிசலுக்கு தீர்வு காண விரைந்து முடிக்க எதிர்பார்ப்பு
/
திருவள்ளூர் புதிய பேருந்து நிலைய பணி மந்தம்:நெரிசலுக்கு தீர்வு காண விரைந்து முடிக்க எதிர்பார்ப்பு
திருவள்ளூர் புதிய பேருந்து நிலைய பணி மந்தம்:நெரிசலுக்கு தீர்வு காண விரைந்து முடிக்க எதிர்பார்ப்பு
திருவள்ளூர் புதிய பேருந்து நிலைய பணி மந்தம்:நெரிசலுக்கு தீர்வு காண விரைந்து முடிக்க எதிர்பார்ப்பு
ADDED : ஜூன் 21, 2024 01:34 AM

திருவள்ளூர்:திருவள்ளூரில் 33 கோடி ரூபாய் மதிப்பில் புதிதாக கட்டப்பட்டு வரும், புதிய பேருந்து நிலைய பணி துவங்கி, 11 மாதங்களாகியும் ஆமை வேகத்தில் நடைபெற்று வருகிறது.
நகரின் நெரிசலுக்கு தீர்வு காணும் இத்திட்டத்திற்கு, பணிகளை விரைந்து முடிக்க நகரவாசிகள் எதிர்பார்க்கின்றனர்.
சென்னைக்கு அருகில் உள்ள திருவள்ளூர், மாவட்டத் தலைநகராக உருவாகி, 30 ஆண்டுகளாகின்றன. சென்னை - திருப்பதி செல்லும் வழியில் உள்ள திருவள்ளூரில் இருந்து, சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, பெரியபாளையம், பொன்னேரி, கும்மிடிப்பூண்டி மற்றும் ஆந்திர மாநிலம் திருப்பதி, காளஹஸ்தி, கர்நாடக மாநிலம் பெங்களூரு போன்ற பல்வேறு பகுதிகளுக்கும், 250க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
ராஜாஜி சாலையில், அரை ஏக்கருக்கும் குறைவான இடத்தில், செயல்பட்டு வரும் பேருந்து நிலையத்தில் ஒரே நேரத்தில், 10 பேருந்துகள் மட்டுமே நிறுத்த முடியும்.
பேருந்து நிலையத்தின் நுழைவு மற்றும் வெளியேறும் வழி, குறுகலாக இருப்பதால், பேருந்துகள் வந்து செல்வதில், சிரமமும் போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது.
இதனால், பொதுமக்களும், பயணியரும் நெரிசலில் சிக்கித்தவித்து வருகின்றனர்.
இதற்கு தீர்வாக, திருவள்ளூர் - ஊத்துக்கோட்டை சாலை, ஐ.சி.எம்.ஆர்., அருகில் உள்ள வேடங்கிநல்லுாரில், 5 ஏக்கர் நிலத்தில், புதிய பேருந்து நிலையம் கட்ட இடம் தேர்வு செய்யப்பட்டு, 3 கோடி ரூபாய் நிதி அரசு ஒதுக்கீடு செய்தது.
இதையடுத்து, பேருந்து நிலைய கட்டுமான பணி, கடந்த ஆண்டு, ஜூலை மாதம் பூமி பூஜையுடன் துவங்கியது. இப்பணி, 15 மாதத்தில் நிறைவடையும் என, அப்போதைய கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்தார்.
இந்த நிலையில், பணி துவங்கி 11 மாதங்களாகியும், பணியில் வேகமின்றி, ஆமை வேகத்தில் வேலை நடந்து வருகிறது.
திட்ட காலம் முடிய இன்னும், நான்கு மாதங்களே உள்ள நிலையில், இந்த ஆண்டிற்குள் பணி நிறைவடைவது சந்தேகமே என, சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர். எனவே, இப்பணியை மாவட்ட நிர்வாகம் மற்றும் நகராட்சி நிர்வாகம் இணைந்து துரிதப்படுத்தினால் தான், திட்டமிட்ட காலத்திற்குள் மக்கள் பயன்பாட்டிற்கு வரும். இதை உணர்ந்து, அரசு துறையினர் பணியை விரைவுபடுத்த வேண்டும் என, பொதுமக்கள் மற்றும் பயணியர் எதிர்பார்க்கின்றனர்.
டிசம்பரில் பயன்பாட்டிற்கு வரும்
புதிய பேருந்து நிலைய கட்டுமான பணியை விரைந்து முடிக்க, ஒப்பந்ததாரருக்கு அறிவுறுத்தி உள்ளோம். இந்த ஆண்டு இறுதி, டிசம்பர் மாதத்திற்குள் வேலை முடிவடைந்து, மக்கள் பயன்பாட்டிற்கு வரும் வகையில், பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன.
- உதயமலர் பாண்டியன்,
நகராட்சி தலைவர், திருவள்ளூர்.