ADDED : ஜூலை 28, 2024 02:20 AM

ஆர்.கே.பேட்டை:ஆர்.கே.பேட்டையில் இருந்து வெள்ளாத்துார் வழியாக மடுகூருக்கு தார் சாலை வசதி உள்ளது. இந்த வழியாக மடுகூர், அம்மனேரி, கொண்டாபுரம், ஸ்ரீகிருஷ்ணாபுரம் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த பகுதிவாசிகள், ஆர்.கே.பேட்டைக்கு வந்து செல்கின்றனர்.
இந்நிலையில், வெள்ளாத்துாரில் இருந்து மடுகூர் செல்லும் சாலை பராமரிப்பு இன்றி குண்டும் குழியுமாக கிடக்கிறது.
மேலும் சாலையின் அகலமும் குறைவாக உள்ளது. எதிரெதிரே வரும் வாகனங்கள், இந்த பகுதியில் ஒன்றையொன்று கடக்க முடியாத நிலை உள்ளது.
சமீபத்தில் இந்த மார்க்கத்தில் குறுக்கிடும் ஓடையின் பாலமும் புதிதாக விரிவாக்கம் செய்யப்பட்டது. ஆனாலும், இந்த சாலை குறுகியுள்ளதால், வாகன ஓட்டிகள் இந்த வழியாக அச்சத்துடன் பயணிக்கும் நிலை உள்ளது.
விவசாயிகள் தங்களின் வயல்வெளிக்கு இந்த வழியாக வாகனங்களில் இடுபொருட்களை கொண்டு செல்லவும், வயல்வெளியில் இருந்து அறுவடை செய்த தானியங்களை கொண்டு வரவும் முடியாமல் தவித்து வருகின்றனர்.
இந்த வழியாக, ஆர்.கே.பேட்டை அரசு மேல்நிலை பள்ளிக்கு மாணவ, மாணவியர் சைக்கிளில் சென்று படிக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மாணவர்கள், விவசாயிகள் மற்றும் பகுதிவாசிகளின் பாதுகாப்பு கருதி இந்த சாலையை விரிவாக்கம் செய்து, புனரமைக்க வேண்டும் என பகுதிவாசிகள் எதிர்பார்க்கின்றனர்.