/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கூவம், கொசஸ்தலை கரையோர பகுதியில் 'சிசிடிவி' கண்காணிப்பு:கழிவுநீர், குப்பை கொட்டுவோருக்கு எச்சரிக்கை
/
கூவம், கொசஸ்தலை கரையோர பகுதியில் 'சிசிடிவி' கண்காணிப்பு:கழிவுநீர், குப்பை கொட்டுவோருக்கு எச்சரிக்கை
கூவம், கொசஸ்தலை கரையோர பகுதியில் 'சிசிடிவி' கண்காணிப்பு:கழிவுநீர், குப்பை கொட்டுவோருக்கு எச்சரிக்கை
கூவம், கொசஸ்தலை கரையோர பகுதியில் 'சிசிடிவி' கண்காணிப்பு:கழிவுநீர், குப்பை கொட்டுவோருக்கு எச்சரிக்கை
ADDED : ஜூன் 20, 2025 02:08 AM

திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஆற்றங்கரையோரம் குப்பை, கழிவு நீர் கொட்டினால், லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டு, கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும், கூவம், கொசஸ்தலை ஆற்று கரையோர பகுதிகளில் கேமரா பொருத்தி
திருவள்ளூர் மாவட்டம் நீர்நிலைகள், ஆறுகள் உள்ளிட்ட இயற்கை வளங்களை உள்ளடக்கிய மாவட்டம். இம்மாவட்டத்தில், கொசஸ்தலை மற்றும் கூவம் ஆறுகள் ஓடுகின்றன.
ஆறுகள் மற்றும் நீர்நிலைகளில் திட மற்றும் திரவ கழிவுகள் கொட்டப்படுவதால், அவைகள் மாசடைந்து வருகின்றன. நீர்நிலைகளை மாசுபடுத்துவது, பல்வேறு சட்டங்களின் கீழ் தண்டனைக்குரிய செயலாகும்.
திருவள்ளூர் மாவட்டத்தில் கூவம் மற்றும் கொசஸ்தலை ஆற்றங்கரையோரம் உள்ள நகர்புறம் மற்றும் ஊரக பகுதியில் உள்ள பொதுமக்கள், வணிக நிறுவனங்கள், அடுக்குமாடி குடியிருப்போர், தொழிற்சாலைகளில் இருந்து அகற்றப்படும் குப்பையை நீர்நிலைகளில் கொட்டி வருகின்றனர்.
வீடுகளில் எடுக்கப்பட்டு வரும் கழிவு நீரை எடுத்து வரும் லாரிகள், திருவள்ளூர், கடம்பத்துார், வெள்ளவேடு உள்ளிட்ட பகுதிகளில் கொட்டி வருகின்றன.
இதையடுத்து, நீர்நிலைகளை மாசுபடுத்தும் செயலில் ஈடுபடுவோர் மீது லாரி பறிமுதல் உள்ளிட்ட நடவடிக்கை எடுக்க, மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து, திருவள்ளூர் கலெக்டர் பிரதாப் கூறியதாவது:
கூவம் மற்றும் கொசஸ்தலை ஆறு மற்றும் நீர்நிலைகளில் குப்பைகள் உள்ளிட்ட திடக்கழிவுகள், கழிவுநீர் உள்ளிட்ட திரவ கழிவுகளை கொட்டுபவர்கள் மீது, தொடர் கண்காணிப்பின் அடிப்படையில் அபராதம் விதிக்கப்படும்.
காவல்துறை வாயிலாக வாகனங்கள் பறிமுதல் செய்வதுடன், பொது சுகாதார சட்டத்தின்படி, வழக்கு பதிவு செய்தல், ஆகிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளையின் அறிவுறுத்தலின் அடிப்படையில், கூவம் ஆற்றங்கரையோரம் உள்ள, சென்னீர்குப்பம், பாரிவாக்கம், வானகரம், அடையாளம்பட்டு ஊராட்சிகள்; கொசஸ்தலை ஆற்றின் கரையோரம் உள்ள விச்சூர், காரனோடை, சீமாவரம், கொண்டக்கரை, சுப்பாரெட்டிபாளையம், வெள்ளிவாயில்சாவடி ஆகிய ஊராட்சிகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது.
மேலும், கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டும், குப்பை மற்றும் கழிவு நீர் கொட்டுவதை தடுக்க தீவிர கண்காணிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும், திடக்கழிவுகளை ஊராட்சிகளில் மின்கல வண்டிகள் மூலம் 'துாய்மைப்பாடல்' ஒலிக்கச் செய்து வீடுதோறும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. பொதுமக்களிடம், மக்கும் மற்றும் மக்காத கழிவினை தனித்தனியாக பிரித்து, துாய்மை காவலரிடம் அளிக்க வலியுறுத்தப்பட்டு வருகிறது.
இவற்றை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்பதால், ஆறுகள், நீர்நிலைகளை மாசுபடாமல் பாதுகாக்க அனைவரும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.