/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மக்களுடன் முதல்வர் திட்டம் பொங்கல் பரிசால் 'வெறிச்'
/
மக்களுடன் முதல்வர் திட்டம் பொங்கல் பரிசால் 'வெறிச்'
மக்களுடன் முதல்வர் திட்டம் பொங்கல் பரிசால் 'வெறிச்'
மக்களுடன் முதல்வர் திட்டம் பொங்கல் பரிசால் 'வெறிச்'
ADDED : ஜன 11, 2024 12:23 AM

கும்மிடிப்பூண்டி பேரூராட்சி மக்களுக்காக, அங்குள்ள திருமண மண்டபம் ஒன்றில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடந்தது.
கும்மிடிப்பூண்டி தி.மு.க., - எம்.எல்.ஏ., கோவிந்தராஜன் முகாமை துவக்கி வைத்தார். முகாம் குறித்து துண்டு பிரசுரம், ஒலி பெருக்கி அறிவிப்பு என, ஒரு வாரமாக அனைத்து விளம்பரமும் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் மேற்கொள்ளப் பட்டது.
மக்கள் கூட்டம் அலைமோதும் என்ற எண்ணத்தில், திருமண மண்டபத்தில் பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. இதில் பங்கேற்ற 13 துறை அலுவலர்களும், ஒதுக்கிய இடத்தில் மனுக்கள் பெற தயாராக இருந்தனர்.
ஆனால், ஏமாற்றம் அளிக்கும் விதமாக, முகாம் துவங்கிய நேரத்தில், மண்டபம் வெறிச்சோடி காணப்பட்டது. மதியத்திற்கு பின் சொர்ப்ப அளவில் மக்கள் வர துவங்கினர்.
முகாமில், மொத்தம் 291 மனுக்கள் மட்டுமே பெறப்பட்டன.
இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், 'நேற்று ரேஷன் கடைகளில், பொங்கல் தொகுப்பு மற்றும் 1,000 ரூபாய் வழங்கியதால், மக்கள் அனைவரும் ரேஷன் கடைக்கு படையெடுத்தனர். அதனால், முகாமில் பங்கேற்க முடியவில்லை' எனக் கூறினர்.
இதனால், ஏராளமான மக்கள், முகாம் குறித்து தகவல் அறிந்தும், பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. கும்மிடிப்பூண்டி பேரூராட்சி மக்களின் நலன் கருதி, மீண்டும் ஒரு நாளில் முகாம் நடத்த வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
திருத்தணி
திருத்தணி தாலுகாவில், 74 வருவாய் கிராமங்களில் மொத்தம், 57,500 ரேஷன் கார்டுதாரர்கள் உள்ளனர். இவர்களுக்கு, 141 ரேஷன் கடைகள் மூலம் பொருட்கள் வழங்கப்படுகிறது.
பொங்கல் பரிசுக்கு தகுதியான, 55,100 ரேஷன் கார்டுகளுக்கு 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு, வேட்டி, சேலை மற்றும் 1,000 ரூபாய் வழங்கப்படுகிறது.
ஆர்.கே.பேட்டை
பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நேற்று ஆர்.கே.பேட்டையில் நடந்தது. அமைச்சர் காந்தி, பயனாளிகளுக்கு பொங்கல் தொகுப்பை வழங்கினார்.
ஆர்.கே.பேட்டை தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கம் அருகே நேற்று நடந்த நிகழ்ச்சியில், திருவள்ளூர் கலெக்டர் பிரபு சங்கர், திருத்தணி எம்.எல்.ஏ., சந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பொன்னேரி
பொன்னேரி நகராட்சியில் உள்ள, 27 வார்டுகளுக்கு மூன்று கட்டங்களாக மக்களுடன் முதல்வர் திட்ட முகாம், தனியார் திருமண மண்டபங்களில் நடந்தது.
மூன்று நாட்கள் நடந்த முகாமில், மொத்தம் 917 மனுக்கள் பெறப்பட்டன. அதில், மின்வாரியம் மற்றும் நகராட்சி நிர்வாகத்தினரிடம் கொடுக்கப்பட்ட மனுக்களில், ஆறு மனுக்கள் மீது தீர்வு காணப்பட்டன.
- நமது நிருபர் குழு -

