/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ஏரியில் தேங்கிய மழைநீர் வடியாததால் தேசிய நெடுஞ்சாலை பணியில் தாமதம்
/
ஏரியில் தேங்கிய மழைநீர் வடியாததால் தேசிய நெடுஞ்சாலை பணியில் தாமதம்
ஏரியில் தேங்கிய மழைநீர் வடியாததால் தேசிய நெடுஞ்சாலை பணியில் தாமதம்
ஏரியில் தேங்கிய மழைநீர் வடியாததால் தேசிய நெடுஞ்சாலை பணியில் தாமதம்
ADDED : பிப் 05, 2024 11:33 PM

திருவள்ளூர்: சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலை திட்டம், திருவள்ளூரில் இருந்து ஆந்திர மாநிலம் ரேணிகுண்டா வரை அமைக்கப்பட்டு போக்குவரத்து பயன்பாட்டில் உள்ளது. திருவள்ளூர் ஐ.சி.எம்.ஆர்., அருகில் இருந்து திருநின்றவூர் வரை, நிலம் கையகப்படுத்துவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக, பணி நடக்கவில்லை.
அப்பிரச்னை முடிவுக்கு வந்து, கடந்த 2022ல், 364 கோடி ரூபாய் மதிப்பில், ஐ.சி.எம்.ஆர்., அருகில் இருந்து, பெரும்பாக்கம் ஏரி, காக்களூர், தண்ணீர்குளம் கடந்து, செவ்வாப்பேட்டை, வேப்பம்பட்டு வழியாக, திருநின்றவூர் வரை பணி நடைபெற்று கொண்டிருக்கிறது.
மொத்தம், 17.5 கி.மீட்டர் துாரம் அமையவுள்ள இச்சாலையில், ஏழு இடங்களில் மேம்பாலம் மற்றும் 17 இடங்களில் சிறு பாலம் கட்டப்பட்டு வருகிறது.
இந்நிலையில், வடகிழக்கு பருவமழை மற்றும் 'மிக்ஜாம்' புயல் காரணமாக பெய்த பலத்த மழையால், பெரும்பாக்கம், தண்ணீர்குளம், காக்களூர் ஏரிகளில் தண்ணீர் நிரம்பி உள்ளது. மேலும், தேசிய நெடுஞ்சாலை பணி நடந்து வரும் இடங்களிலும், தண்ணீர் தேங்கியது.
இதன் காரணமாக, மேம்பாலங்கள் மற்றும் சாலை பணி தடைபட்டுள்ளது. தண்ணீர் வடிந்த பகுதிகளில் மட்டும் சாலை பணி வேகம் பிடித்துள்ளது.
இருப்பினும், பெரும்பாக்கம் ஏரி அருகில், கடல் போல் தேங்கிய தண்ணீரால், மேம்பால பணி நடைபெறாமல் உள்ளது.
இதனால், குறிப்பிட்ட காலத்திற்குள் திருவள்ளூர் - திருநின்றவூர் தேசிய நெடுஞ்சாலை நிறைவடைவதில் சிக்கல் நிலவுகிறது.
பெரும்பாக்கம் ஏரியில் தேங்கியுள்ள மழைநீரால் மேம்பால பணி தடைபட்டுள்ளது. இடம்: திருவள்ளூர்.