/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
செயல்படாத சோதனைச்சாவடியால் அதிருப்தி
/
செயல்படாத சோதனைச்சாவடியால் அதிருப்தி
ADDED : ஜூன் 22, 2025 07:49 AM

ஆர்.கே.பேட்டை : ஆந்திர மாநில எல்லையை ஒட்டி அமைக்கப்பட்டுள்ள தமிழக மதுவிலக்கு அமலாக்க பிரிவு சோதனைச்சாவடி பூட்டி கிடப்பதால், சமூக ஆர்வலர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
ஆர்.கே.பேட்டை மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார், திருத்தணியில் இருந்து நகரி செல்லும் மாநில நெடுஞ்சாலையில் அடிக்கடி போதை பொருட்களை பறிமுதல் செய்து, கடத்தல்காரர்களை கைது செய்து வருகின்றனர்.
அதேபோல், ஆர்.கே.பேட்டை, பள்ளிப்பட்டு தாலுகாவை ஒட்டியுள்ள ஆந்திர மாநில எல்லைகளிலும், மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் அடிக்கடி ரோந்து மேற்கொள்ள வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
ஆர்.கே.பேட்டை ஒன்றியம், அம்மையார்குப்பம் அடுத்த காட்டூர் மற்றும் தேவலாம்பாபுரம் பகுதியில் உள்ள மதுவிலக்கு அமலாக்க பிரிவு சோதனைச் சாவடிகள் தொடர்ந்து பூட்டியே கிடக்கின்றன. இதனால், போதைப் பொருட்கள் நடமாட்டம் அதிகரித்துள்ளன.
தேவலாம்பாபுரம் அடுத்த அய்யன்கண்டிகை என்ற ஆந்திர மாநில கிராமத்தில், சில ஆண்டுகளுக்கு முன், ஆந்திரா மற்றும் திருவள்ளூர் மாவட்ட போலீசார், சாராய ஊறல்களை அழித்துள்ளனர்.
பொன்பாடி சோதனைச்சாவடியில் ஆர்.கே.பேட்டை மதுவிலக்கு போலீசார் சோதனை மேற்கொண்டு வரும் நிலையில், காட்டூர் மற்றும் தேவலாம்பாபுரம் சோதனைச்சாவடிகளையும் முழுவீச்சில் செயல்படுத்த வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.