/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
நீர்வரத்து கால்வாய் ஆக்கிரமிப்பால் 10 ஆண்டுகளாக நிரம்பாத தாடூர் ஏரி இரண்டே மாதத்தில் வறண்ட அவலம்

ADDED : பிப் 29, 2024 09:40 PM

திருத்தணி:திருத்தணி ஒன்றியம், தாடூர் பெரிய ஏரி, 137.58 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இந்த ஏரிக்கு, எஸ்.அக்ரஹாரம் பெரிய ஏரியில் இருந்து வெளியேறும் உபரிநீரும், மழை பெய்யும் போது தாடூரை சுற்றியுள்ள வயல்வெளி, நீர்வரத்து கால்வாய் வழியாக வரும் தண்ணீரும் முக்கிய நீராதாரமாக உள்ளது.
இந்த ஏரியை திருத்தணி நீர்வளத் துறையினர் பராமரித்து வருகின்றனர். இதை நம்பி தாடூர், தலையாறிதாங்கல் ஆகிய கிராம விவசாயிகள், 500க்கும் மேற்பட்ட ஏக்கரில் பயிரிட்டு வருகின்றனர்.
மேலும், ஏரியில் தண்ணீர் இருந்தால் விவசாய கிணறுகள் மற்றும் ஊராட்சிக்கு குடிநீர் வழங்கும் ஆழ்துளை கிணறுகளில் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக உயரும்.
இந்நிலையில், தாடூர் பெரிய ஏரிக்கு வரும் நீர்வரத்து கால்வாய்கள் மற்றும் எஸ்.அக்ரஹாரம் ஏரியில் இருந்து வரும் நீர்வரத்து கால்வாய்களை சிலர் ஆக்கிரமித்து வீடுகள் மற்றும் விவசாயம் மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக தாடூர் ஏரி முழுமையாக நிரம்பாமல் உள்ளது. கடந்த டிசம்பர் மாதம் பெய்த பருவமழையால், தாடூர் பெரிய ஏரியை தவிர, மீதமுள்ள அனைத்து ஏரிகளும் நிரம்பி வழிந்தன. பருவமழையின் போது ஏரியில் சில இடங்களில் இருந்த பள்ளங்களில் மட்டுமே தண்ணீர் தேங்கியது. தற்போது, பருவமழை முடிந்து இரண்டு மாதங்களே ஆன நிலையில், சிறுதுளி தண்ணீர் கூட இல்லாமல் ஏரி வறண்டுள்ளது.
இதனால், இந்த ஏரி பாசனத்தை நம்பியிருந்த விவசாயிகள் அதிர்ச்சியில் உறைந்தனர். மேலும், பயிர்களை காப்பாற்ற முடியாமல் திணறி வருகின்றனர்.
எனவே, தாடூர் ஏரிக்கு வரும் நீர்வரத்து கால்வாய்களில் உள்ள ஆக்கிமிரப்புகளை அகற்றி, துார்வாரி சீரமைக்க, கலெக்டர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.