/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கூட்டு சாலையில் புழுதி வாகன ஓட்டிகள் அவதி
/
கூட்டு சாலையில் புழுதி வாகன ஓட்டிகள் அவதி
ADDED : ஜூன் 13, 2025 03:15 AM

பள்ளிப்பட்டு,:பள்ளிப்பட்டு பகுதி சாலையில் செல்லும் குவாரி லாரிகளில் இருந்து பறக்கும் புழுதியால், சாலையில் செல்லும் பிற வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.
பள்ளிப்பட்டு பகுதியில் ஏராளமான மண் மற்றும் கல் குவாரிகள் செயல்பட்டு வருகின்றன, கொளத்துார் அருகே கல் குவாரி, சாமிநாயுடு கண்டிகை, அத்திமாஞ்சேரிபேட்டை, ஆந்திர மாநிலம், பலிஜி கண்டிகை உள்ளிட்ட பகுதிகளில் மண் குவாரிகள் செயல்பட்டு வருகின்றன.
இந்த குவாரிகளுக்கு தினசரி நுாற்றுக்கணக்கான டிப்பர் லாரிகள் வந்து செல்கின்றன. அதிவேகமாக செல்லும் இந்த லாரிகளால் விபத்து நடந்து வருகிறது.
இந்நிலையில், பள்ளிப்பட்டில் இருந்து ஆர்.கே.பேட்டை செல்லும் மாநில நெடுஞ்சாலையை ஒட்டி அமைந்துள்ள மூன்று குவாரிகளுக்கு இணைப்பு சாலை மண் சாலையாக உள்ளது.
இந்த மண் சாலைகளில் இருந்து நெடுஞ்சாலைக்குள் நுழையும் டிப்பர் லாரிகளால் நெடுஞ்சாலையில் புழுதி பறக்கிறது. குவாரியை ஒட்டி கூட்டு சாலையில் அவ்வப்போது தண்ணீர் தெளிக்கப்பட்டாலும், புழுதி கட்டுப்படுவது இல்லை. தார் சாலையில் குவியும் மண்ணை அகற்றாமல் தண்ணீர் தெளிப்பதால் புழுதி படிகிறது. சாலையில் படியும் மண்ணை சுத்தமாக அகற்றி தண்ணீர் தெளிக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.