/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ஆக்கிரமிப்புகளால் சீரழியும் மாமல்லை: கடற்கரை தற்காலிக கடைகளை கட்டுப்படுத்த வலியுறுத்தல்
/
ஆக்கிரமிப்புகளால் சீரழியும் மாமல்லை: கடற்கரை தற்காலிக கடைகளை கட்டுப்படுத்த வலியுறுத்தல்
ஆக்கிரமிப்புகளால் சீரழியும் மாமல்லை: கடற்கரை தற்காலிக கடைகளை கட்டுப்படுத்த வலியுறுத்தல்
ஆக்கிரமிப்புகளால் சீரழியும் மாமல்லை: கடற்கரை தற்காலிக கடைகளை கட்டுப்படுத்த வலியுறுத்தல்
ADDED : ஜன 27, 2024 01:48 AM

மாமல்லபுரம்:பல்லவர் கால சிற்பங்களை காண, ஒவ்வொரு ஆண்டும் மாமல்லபுரத்திற்கு சுற்றுலா வரும் பயணியரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
ஒவ்வொரு சிற்பங்களாக கண்டுகளித்து, களிப்படைந்து வரும் சுற்றுலா பயணியர், கடற்கரை மணல்வெளியில் உலவி இளைப்பாறி, துாயகாற்றை சுவாசிக்கின்றனர்.
சுற்றுலா பயணியர் விரும்பும் கடற்கரையை, இயற்கை சுற்றுச்சூழல் தன்மையுடன், துாய்மையாக பராமரிப்பது அவசியம். அதற்கு மாறாக, பெருகிவரும் வியாபார ஆக்கிரமிப்புகளால், மாமல்லபுரம் கடற்கரை சீரழிந்து வருகிறது.
கடற்கரை முழுதும் தற்காலிக கடைகள், பொழுதுபோக்கு விளையாட்டு உபகரணங்கள் உள்ளிட்டவை அமைத்து, கடற்கரை கோவில் பகுதி கடற்கரை ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளது.
கைவினை பொருட்கள், தின்பண்டங்கள், குளிர்பானம், ஐஸ் க்ரீம், இளநீர், வறுவல் மீன் உள்ளிட்ட கடைகள், தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. புதிய வியாபாரிகள் பெருகுவதால், சற்று தொலைவு வரை, மணற்பரப்பு மறைந்து பரபரப்பான வணிகப் பகுதியாக மாறியுள்ளது.
பலுான் சுடுதல், பொருளில் வளையம் வீசுதல் உள்ளிட்ட கேளிக்கை விளையாட்டுகள், ராட்டிணங்கள் ஆகியவையும் பெருகி வருகின்றன. பல்லவர் கால கற்கோவிலை ஆக்கிரமிப்புகள் மறைத்து, கடற்கரை பகுதியிலிருந்து, அதை காண இயலாத சூழல் உள்ளது.
குப்பை, பலுானை சுட்டு தெறிக்கும் ரப்பர் துணுக்குகள், இளநீர் மட்டைகள், பிளாஸ்டிக், பாலிதீன் பைகள், மணற்பரப்பில் குவிக்கப்படுகின்றன. சவாரி குதிரைகள், ஒட்டக சாணம், வறுவல் மீன் கழிவுகள் குவிந்து, கடற்கரை முழுதும் துர்நாற்றம் வீசுகிறது.
ராட்டிணம், சிறுவர் விளையாட்டு ரப்பர் சாதனத்திற்கு காற்று நிரப்ப, டீசல் மோட்டார் பயன்படுத்தப்படுவதால், கரும்புகை வெளியேறி சுற்றுச்சூழல் மாசடைகிறது.
பயணியர் உலவும் மணற்பரப்பில் சவுக்கு தடுப்பு அமைத்து, நைலான் கயிறு, வலை கட்டி ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால், பயணியர் நடந்து செல்லவே இடமின்றி அவதிக்குள்ளாகின்றனர்.
கடற்கரை மேம்பாட்டை வலியுறுத்தி, நம் நாளிதழில் செய்தி வெளியிட்டதைத் தொடர்ந்து, சுவதேஷ் தர்ஷன் திட்டத்தை செயல்படுத்த முடிவெடுக்கப்பட்டு, பல ஆண்டுகள் கடந்தும் கிடப்பில் கிடக்கிறது.
அதனால், ஆக்கிரமிப்பாளர்கள், கடற்கரை பகுதி துாய்மையில் அக்கறையின்றி, இன்னும் மோசமாக சீரழித்து வருகின்றனர்.
எனவே, மாமல்லை கடற்கரையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, பயணியர் உலவி இளைப்பாறும் வகையில், இயற்கைச்சூழலுடன் பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சுற்றுலா ஆர்வலர்கள் வலியுறுத்திஉள்ளனர்.

