ADDED : ஜூன் 30, 2025 11:13 PM

பள்ளிப்பட்டு, அரசு நடுநிலைப் பள்ளி எதிரே உள்ள பயணியர் நிழற்குடை பராமரிப்பின்றி உள்ளது.
பள்ளிப்பட்டு ஒன்றியம் கர்லம்பாக்கம் கிராமத்தில், மாநில நெடுஞ்சாலையோரம் அரசு நடுநிலைப் பள்ளியும், அதையொட்டி அங்கன்வாடி மையம், நுாலகம், ரேஷன் கடை, மகளிர் சுயஉதவிக்குழு, தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கி என, பல்வேறு அரசு அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன.
இதில், அரசு நடுநிலைப் பள்ளி எதிரே பயணியர் நிழற்குடை அமைந்துள்ளது. இந்த நிழற்குடையின் பின்புறம் ஏரி உபரிநீர் கால்வாய் செல்கிறது. நீர்வரத்து கால்வாயை ஒட்டி இருப்பதால், நிழற்குடையின் தரைதளம் மண்ணில் உள்வாங்கி வருகிறது.
இந்த மண் சரிவால், நிழற்குடையின் உறுதித்தன்மை கேள்விக்குறியாகி உள்ளது.
எனவே, மாணவர்கள், பயணியரின் பாதுகாப்பு கருதி, நிழற்குடையை சீரமைக்க வேண்டும் என, பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.