/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
நீர்நிலைகளின் எல்லை அளவெடுக்க கிராம சபையில் தீர்மானம்
/
நீர்நிலைகளின் எல்லை அளவெடுக்க கிராம சபையில் தீர்மானம்
நீர்நிலைகளின் எல்லை அளவெடுக்க கிராம சபையில் தீர்மானம்
நீர்நிலைகளின் எல்லை அளவெடுக்க கிராம சபையில் தீர்மானம்
ADDED : ஜன 27, 2024 01:16 AM

திருவள்ளூர் மாவட்டத்தில் 526 ஊராட்சிகளிலும் நேற்று 75வது குடியரசு தின விழாவை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடந்தது.
ஏகாட்டூர்
கடம்பத்துார் ஒன்றியம் ஏகாட்டூர் ஊராட்சியில் நுாலக வளாகத்தில் ஊராட்சி மன்ற தலைவர் ராஜேந்திரன் தலைமையில் நடந்த கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார்.
கூட்டத்தில் குடியரசு தினம் குறித்து சிறப்புரையாற்றிய மாவட்ட கலெக்டர் பின் பகுதிவாசிகளிடம் நேரடியாக சென்று கோரிக்கை மனு வாங்கினார்.
பின் பகுதிவாசிகளிடம் குறைகளை கேட்டறிந்தார். பகுதிவாசிகளின் வேண்டுகோளை அடுத்து ஏகாட்டூர் ஏரிக்கரை சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படுமென தெரிவித்தார்.
கூட்டத்தில் மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் உமாமகேஸ்வரி, கடம்பத்துார் ஒன்றிய குழு தலைவர் சுஜாதா, ஒன்றிய அலுவலர்கள் வரதராஜன், வேதநாயகி உட்பட அனைத்து துறை அலுவலர்கள், ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், பகுதிவாசிகள் பங்கேற்றனர்.
உளுந்தை
உளுந்தை ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் ஊராட்சி மன்ற தலைவர் எம்.கே.ரமேஷ் தலைமையில் நடந்த கூட்டத்தில் மருத்துவம், வருவாய், வேளாண்மை, பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் வார்டு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
கூட்டத்தில் குழந்தை திருமணம், பாலியல் தொல்லை போன்ற குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
தொடர்ந்து அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவமனைக்கு சுற்றுச்சுவர், நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றி வீடில்லாத பகுதிவாசிகளுக்கு இலவச வீட்டுமனை வழங்குவது உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
l மீஞ்சூர் ஒன்றியத்தில், 55 ஊராட்சிகளில், சோழவரம் ஒன்றியத்தில், 29 ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் நடந்தது. கூட்டத்தில் பங்கேற்ற கிராமவாசிகள் குடிநீர், சாலை, மின்விளக்கு, வீட்டுமனை பட்டா உள்ளிட்ட பல்வேறு குறைகளை தெரிவித்தனர்.
அனுப்பம்பட்டு ஊராட்சியில் நீர்நிலைகளின் எல்லைகளை அளவீடு செய்துதர வருவாய்த்துறையினரிடம் உரிய கட்டணம் செலுத்தப்பட்டு உள்ளதால், அத்துறையினர் உடனடியாக அதற்கான பணிகளை மேற்கொள்ள வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
*கும்மிடிப்பூண்டி ஒன்றியத்திற்கு உட்பட்ட, 61 ஊராட்சிகளிலும் நேற்று கிராம சபை கூட்டம் நடந்தது. மாநெல்லுார் ஊராட்சியில், தலைவர் லாரன்ஸ் தலைமையில் நடந்த கிராம சபை கூட்டத்தில், மாநெல்லுார் சிப்காட் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
புதுகும்மிடிப்பூண்டி ஊராட்சியில் தலைவர் அஸ்வினி தலைமையில் நடந்த கூட்டத்தில், ஊராட்சிக்கு உட்பட்ட அனைத்து இடங்களிலும் கண்காணிப்பு கேமரா, தொழிற்சாலை மாசு அதிகரித்து வருவதால் விதிகள் மீறும் தொழிற்சாலைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கீழ்முதலம்பேடு ஊராட்சியில் தலைவர் நமச்சிவாயம் தலைமையில் நடந்த கூட்டத்தில், திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை முறையாக செயல்படுத்த நவீன எந்திரங்கள், போதிய இட வசதி, போதிய துாய்மை பணியாளர்கள் நியமிக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
l ஆர்.கே.பேட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட, 38 ஊராட்சிகளிலும் நேற்று கிராம சபை கூட்டம் நடந்தது. பாலாபுரம் ஊராட்சியில் கிராமத்தினர், ஏரியின் மதகு சீரமைக்க வலியுறுத்தி, மனு அளித்தனர்.
வெள்ளாத்துார் ஊராட்சிக்கு உட்பட்ட காலனியில் கிராம சபை கூட்டம் நடத்தப்பட்டது. ஜி.சி.எஸ்.கண்டிகை ஊராட்சியில் நடந்த கிராம சபையில், ஊராட்சி செயலர், வரவு, செலவு அறிக்கையை சமர்ப்பித்தார். சஞ்சீவிபுரம், ஜி.சி.எஸ்.கண்டிகை, ஜி.சி.எஸ்.கண்டிகை காலனியை சேர்ந்த பகுதிவாசிகள் இதில் பங்கேற்றனர்.
l திருவாலங்காடு ஒன்றியத்திற்கு உட்பட்ட, 42 ஊராட்சிகளிலும் நேற்று கிராம சபை கூட்டம் நடந்தது.
இதில் தொழுதாவூர் ஊராட்சி, கலைஞர் நகர் பகுதியில், 300க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன.
இங்கு குறைந்த மின்னழுத்தம் உள்ளதால் மின்மாற்றி அமைக்க வேண்டும் என, 5 ஆண்டுகளாக கோரிக்கை வைத்தும் மின்துறையினர் அலட்சியம் காட்டுவதால் மக்கள் அவதிப்படுகின்றனர். எனவே விரைந்து சீரமைக்க வேண்டும் என, கோரிக்கை வைத்தனர்.
அரிசந்திராபுரம் ஊராட்சியில், ஆழ்துளை போர் பம்பு பழுதடைந்து உள்ளதால் சீரமைக்க நிதி ஒதுக்க வேண்டும் என, ஒன்றிய சேர்மனிடம் ஊராட்சி தலைவர் கோரிக்கை மனு அளித்தார்.
நார்த்தவாடா ஊராட்சியில், குடிநீர் பற்றாக்குறையை போக்க ஆழ்துளை கிணறு அமைக்க வேண்டும் என, கோரிக்கை வைத்தனர்.
l திருத்தணி ஒன்றியத்தில் உள்ள, 27 ஊராட்சிகளிலும் சிறப்பு கிராம சபை கூட்டம் நடந்தது. அலுமேலுமங்காபுரம் ஊராட்சியில் நடந்த கிராம சபையில், திருத்தணி ஆர்.டி.ஓ., தீபா, தாசில்தார் மதன், வருவாய் ஆய்வாளர் கமல், ஊராட்சி மன்ற தலைவர் கவிதாரமேஷ் ஆகியோர் பங்கேற்றனர்.
அப்போது தெரு விளக்குகள் எரிவதில்லை, கால்வாய் மற்றும் சாலை வசதியில்லை, குடிநீர் பிரச்னை உள்பட பல்வேறு புகார் தெரிவித்தனர். மேலும், எங்கள் ஊராட்சிக்கு அரசு பேருந்து இயக்க வேண்டும் என ஆர்.டி.ஓ., தீபாவிடம் மனு கொடுத்தனர்.
வேலஞ்சேரி ஊராட்சியில் நடந்த கிராம சபையில், விளையாட்டு மைதானம் மற்றும் கழிவுநீர் கால்வாய் வசதி ஏற்படுத்தி தரவேண்டும் என, இளைஞர்கள் கோரிக்கை வைத்தனர்.
நல்லாட்டூர் ஊராட்சியில் தலைவர் கலையரசி தலைமையில் நடந்த கூட்டத்தில் பகுதி நேர ரேஷன் கடை திறக்க வேண்டும்.
லட்சுமாபுரம் ஊராட்சி தலைவர் கங்கா தலைமையில் நடந்த கிராம சபையில், டி.45 என்ற அரசு டவுன் பேருந்து குன்னத்துார், தாசிரெட்டி கண்டிகை,சொட்டநத்தம் கிராமம் வழியாக இயக்கினால் நாபளூர், லட்சுமாபுரம் உள்ளிட்ட ஆறு கிராம மக்கள் பயன்பெறுவர் என கோரிக்கை வைத்தனர்.
l பூண்டி ஒன்றியம், அனந்தேரி ஊராட்சியில், தலைவர் தையல் நாயகி தலைமையில் நடந்த கிராம சபை கூட்டத்தில் பங்கேற்ற பெண்கள், செல்லியம்மன் கோவில் அருகே உள்ள டிரான்ஸ்பார்மரை இடம் மாற்ற கோரி, ஊத்துக்கோட்டை மின்வாரிய அலுவலகத்தில் புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லை.
கிராம சபைகளில் தீர்மானம் நிறைவேற்றியும் பலனில்லை. எனவே, கிராம பெண்கள் விரைவில் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக கூறினர்.
ராமநாதபுரம் ஊராட்சியில், தலைவர் மாரியம்மாள் தலைமையில் நடந்த கூட்டத்தில், குஞ்சலம் - ராமநாதபுரம் இடையே, 1.5 கி.மீட்டர் துாரத்திற்கு சாலை அமைத்தல், மூங்கில் ஏரி கலங்கல் சீரமைத்தல், பொன்னியம்மன் கோவில் அருகே, சாலையில் கல்வெட்டு அமைத்தல் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
- நமது நிருபர்குழு-

