/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
தொழிலாளர்களை தேடி மருத்துவம் சுப்பிரமணியன் துவக்கி வைத்தார்
/
தொழிலாளர்களை தேடி மருத்துவம் சுப்பிரமணியன் துவக்கி வைத்தார்
தொழிலாளர்களை தேடி மருத்துவம் சுப்பிரமணியன் துவக்கி வைத்தார்
தொழிலாளர்களை தேடி மருத்துவம் சுப்பிரமணியன் துவக்கி வைத்தார்
ADDED : ஜன 09, 2024 10:21 PM

திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்துார் ஒன்றியம் தொடுகாடு ஊராட்சியில் 'ஹூண்டாய் மோபிஸ்' இந்தியா என்ற கார் உதிரிபாங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை வளாகம் உள்ளது.
இதில் நேற்று பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை சார்பில் தொழிலாளர்களை தேடி தொற்றா நோய்க்கான மருத்துவ திட்டம் துவக்க விழா நடந்தது.
திருவள்ளூர் கலெக்டர் பிரபுசங்கர், தமிழ்நாடு சுகாதார அமைப்பு திட்ட இயக்குனர் கோவிந்தராவ் முன்னிலையில் நடந்த விழாவில், திட்டங்கள் குறித்து பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை இயக்குநர் த.சி செல்வவிநாயகம் பேசினார்.
தொடர்ந்து மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், கைத்தறி மற்றும் துணிநுால் துறை அமைச்சர் ஆர்.காந்தி ஆகியோர் தொழிலாளர்களை தேடி மருத்துவ திட்டம் என்னும் தொற்றா நோய்க்கான பணியிடம் சார்ந்த பரிசோதனை குறித்த வழிகாட்டு கையேடு வெளியிட்டு மருத்துவ திட்டம் மற்றும் செயலியை துவக்கி வைத்தனர்.
அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியதாவது :
தமிழகத்தில் மக்களை தேடி மருத்துவ முகாம் மூலம் இதுவரை 1 கோடியே 69 லட்சத்து 60 ஆயிரத்து 713 பேர் பயனடைந்துள்ளனர்.
மக்களைத்தேடி மருத்துவ முகாம் என்ற மகத்தான திட்டத்தை போல் தொழிற்சாலைகளில் பணிபுரிந்து வரும் பணியாளர்களின் உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் போன்ற தொற்றா நோய் பரிசோதனைகளை கண்டறிந்து சிகிச்சையளிக்கும் வகையில் தொழிலாளர்களை தேடி மருத்துவ திட்டம் நேற்று தமிழகம் முழுதும் துவக்கப்பட்டது.
தமிழகத்தில் 31 ஆயிரத்து 493 தொழிற்சாலைகளில் 31 லட்சத்து 16 ஆயிரத்து 835 தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
இதில் முதல்கட்டமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட 29 மாவட்டங்களில் உள்ள 711 தொழிற்சாலைகளில் பணிபுரியும் 8 லட்சத்து 53 ஆயிரத்து 90 தொழிலாளர்களுக்கு தொற்றா நோய்க்கான பரிசோதனை நடத்தப்பட்டு சிகிச்சை மேற்கொள்ளப்படும் பணி நடைபெற உள்ளது. ஒரு மாதத்தில் இலக்கை அடையும் வகையில் பணி மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் தி.மு.க.,- எம்.எல்.ஏ.,க்கள் திருவள்ளூர் வி.ஜி. ராஜேந்திரன், திருத்தணி எஸ்.சந்திரன், மாவட்ட ஊராட்சி தலைவர் உமா மகேஷ்வரி, பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்புத்துறை தொற்றாநோய் பிரிவு இணை இயக்குனர் கிருஷ்ணராஜ், திருவள்ளூர் அரசு மருத்துவக்கல்லுாரி முதல்வர், ரேவதி, கடம்பத்துார் வட்டார மருத்துவ அலுவலர் டில்லிபாய் உட்பட பலர் பங்கேற்றனர்.

