/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கஞ்சா தம்பியை திருத்த முயன்ற அண்ணனை குண்டு வீசி கொன்ற ஆசாமிகள் பேரம்பாக்கத்தில் பேரதிர்ச்சி
/
கஞ்சா தம்பியை திருத்த முயன்ற அண்ணனை குண்டு வீசி கொன்ற ஆசாமிகள் பேரம்பாக்கத்தில் பேரதிர்ச்சி
கஞ்சா தம்பியை திருத்த முயன்ற அண்ணனை குண்டு வீசி கொன்ற ஆசாமிகள் பேரம்பாக்கத்தில் பேரதிர்ச்சி
கஞ்சா தம்பியை திருத்த முயன்ற அண்ணனை குண்டு வீசி கொன்ற ஆசாமிகள் பேரம்பாக்கத்தில் பேரதிர்ச்சி
ADDED : ஜூன் 27, 2025 02:26 AM

கடம்பத்துார்,:போதை பழக்கத்திற்கு அடிமையான தம்பியை நல்வழிப்படுத்த முயன்ற அண்ணனை, தம்பியின் கூட்டாளிகள் குண்டுவீசி வெட்டி படுகொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்துார் ஒன்றியம் பேரம்பாக்கத்தைச் சேர்ந்தவர் முகேஷ், 25. இவருக்கு 17 வயதில் தம்பி உள்ளார்.
முகேஷின் தம்பிக்கு, சின்ன மண்டலி கிராமத்தைச் சேர்ந்த ஆகாஷ், 19, வாயிலாக, போதை ஆசாமிகளுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் போதைக்கு அடிமையாகி உள்ளார்.
இதையறிந்த முகேஷ், 'ஆகாஷுடன் இனி சேரக்கூடாது' என, தம்பியை கண்டித்துள்ளார். மேலும், அவரை நல்வழிப்படுத்த, தன்னுடன் சிலிண்டர் போடும் பணிக்கு அழைத்துச் சென்றுள்ளார். இந்த நிலையில், கடந்த 22ம் தேதி வீட்டருகே முகேஷும், அவரது தம்பியும் பேசிக் கொண்டிருந்தனர்.
அப்போது, அங்கு வந்த ஆகாஷ் மற்றும் பாரூக், 18, ஆகியோர் 'உன் தம்பியை எங்களுடன் சேரவிட மாட்டாயா?' எனக் கேட்டு, முகேஷிடம் தகராறில் ஈடுபட்டனர். ஆத்திரமடைந்த முகேஷ், ஆகாஷின் காதை வெட்டியுள்ளார். பின், ஆகாஷும், பாரூக்கும் தாக்கியதில் முகேஷ் காயமடைந்தார்.
இது குறித்து, இருதரப்பினரும் கொடுத்த புகாரின்படி, மப்பேடு போலீசார் விசாரித்தனர். ஆகாஷ், பாரூக், முகேஷ், ஆகிய மூவரையும் கைது செய்து, திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சொந்த ஜாமினில் விடுவித்தனர்.
இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு 10:45 மணியளவில், பேரம்பாக்கம் காந்தி நகர் பகுதியில் முகேஷ், தன் நண்பர்களான தீபன், 20, ஜாவித் மியாண்டட், 30, ஆகியோருடன் பேசிக் கொண்டிருந்தார்.
அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம கும்பல், நாட்டு வெடிகுண்டை வீசியது. இதில், கீழே விழுந்த மூவரையும், அரிவாளால் வெட்டி தப்பியது.
பலத்த காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்த மூவரையும், அங்கிருந்தோர் மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், வழியிலேயே முகேஷ் உயிரிழந்தார். தீபன் மேல்சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
சம்பவ இடத்தில் வெடிக்காமல் கிடந்த ஒரு நாட்டு வெடிகுண்டை கைப்பற்றிய மப்பேடு போலீசார், ஆகாஷ் மற்றும் அவரது கூட்டாளிகளான சஞ்சய், 19, ரியாஸ் மதுபாஷா, 19, வசந்த், 24, சின்ன ஆகாஷ், 17, ஆகிய ஐந்து பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.