/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் கையிருப்பு 8.38 டி.எம்.சி., கோடை மழையால் மேலும் உயர வாய்ப்பு
/
சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் கையிருப்பு 8.38 டி.எம்.சி., கோடை மழையால் மேலும் உயர வாய்ப்பு
சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் கையிருப்பு 8.38 டி.எம்.சி., கோடை மழையால் மேலும் உயர வாய்ப்பு
சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் கையிருப்பு 8.38 டி.எம்.சி., கோடை மழையால் மேலும் உயர வாய்ப்பு
ADDED : ஜூன் 06, 2025 02:40 AM
திருவள்ளூர்:சென்னை மாநகராட்சி பொதுமக்களுக்கு, தினமும் 100 கோடி லிட்டர் குடிநீரை, சென்னை குடிநீர் வாரியம் வழங்கி வருகிறது. மாநகரின் ஒரு மாதத்திற்கான குறைந்தபட்ச குடிநீர் தேவை, 1 டி.எம்.சி.,
இந்த குடிநீரை, சென்னைக்கு அருகில் உள்ள திருவள்ளூர் மாவட்டத்தில் இருக்கும் பூண்டி, புழல், சோழவரம், கண்ணன்கோட்டை - தேர்வாய்கண்டிகை, செம்பரம்பாக்கம் மற்றும் வீராணம் ஏரிகள் பூர்த்தி செய்கின்றன. இவற்றின் ஒட்டுமொத்த கொள்ளளவு 13.22 டி.எம்.சி.,
கடந்த மாதம் அக்னி நட்சத்திரம் காலத்தில், வெப்பத்தின் தாக்கம் ஓரளவு கட்டுக்குள் இருந்ததால், வெயிலின் உக்கிரம் தெரியவில்லை. மேலும், அவ்வப்போது, கோடை மழை பெய்ததால், வெப்பத்தின் தாக்கமும் குறைந்தது. ஒரு வாரமாக, அவ்வப்போது பரவலாக கோடை மழை பெய்து வருகிறது.
மேலும், ஆந்திர மாநிலத்தில் இருந்து கிருஷ்ணா நீர் திறக்கப்பட்டு, பூண்டி நீர்த்தேக்கத்திற்கு வந்து கொண்டிருக்கிறது.
தற்போது, சென்னைக்கு குடிநீர் வழங்கும் நீர்த்தேக்கங்களான பூண்டி, சோழவரம், புழல், கண்ணன்கோட்டை - தேர்வாய்கண்டிகை போன்றவைகளில் நீர் இருப்பு, கடந்தாண்டை விட சற்று அதிகமாக உள்ளது. கடந்தாண்டு மொத்த நீர்த்தேக்கத்திலும் நீர் இருப்பு, 5.79 டி.எம்.சி., என்ற அளவில் இருந்தது.
நேற்று நிலவரப்படி, பூண்டி நீர்த்தேக்கத்தின் மொத்த கொள்ளளவான 3.231 டி.எம்.சி.,யில், 1.59 டி.எம்.சி., தண்ணீர் நிரம்பி உள்ளது. அதேபோல், புழல் ஏரியில் 2.86 டி.எம்.சி., சோழவரத்தில் 0.15 டி.எம்.சி.,
கண்ணன்கோட்டை - தேர்வாய்கண்டிகை ஏரியில், 0.29 டி.எம்.சி., செம்பரம்பாக்கத்தில் 2.01 டி.எம்.சி., வீராணத்தில் 1.46 டி.எம்.சி., என்ற அளவில் தண்ணீர் இருப்பு உள்ளது. இது, மொத்த கொள்ளளவான 13.22 டி.எம்.சி.,யில், தற்போது ஆறு ஏரிகளிலும், 8.38 டி.எம்.சி., தண்ணீர் இருப்பு உள்ளது.
மொத்த சதவீதத்தில், 63.39 சதவீதம் நீர் இருப்பு உள்ளதால், நடப்பாண்டு சென்னைக்கு குடிநீர் தட்டுப்பாடு வராது.
இதுகுறித்து நீர்வள ஆதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது:
சென்னைக்கு குடிநீர் வழங்கும் பிரதான ஏரிகள் உட்பட திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஏரி, குளங்களும் கோடை மழையால் நிரம்பி வருகின்றன. தொடர்ந்து மழை பெய்தால், பிரதான ஏரிகளின் நீர் இருப்பு உயர வாய்ப்புள்ளது.
ஆந்திர மாநிலம் கிருஷ்ணாபுரம் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால், பூண்டிக்கு நீர்வரத்து வந்து கொண்டிருக்கிறது. இதன் வாயிலாக, சென்னை நகரின் குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்படும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.