/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
வி.சி., கவுன்சிலர் வெட்டி கொலை கணவர் உட்பட மூன்று பேர் கைது நடத்தையில் சந்தேகத்தால் வெறிச்செயல்
/
வி.சி., கவுன்சிலர் வெட்டி கொலை கணவர் உட்பட மூன்று பேர் கைது நடத்தையில் சந்தேகத்தால் வெறிச்செயல்
வி.சி., கவுன்சிலர் வெட்டி கொலை கணவர் உட்பட மூன்று பேர் கைது நடத்தையில் சந்தேகத்தால் வெறிச்செயல்
வி.சி., கவுன்சிலர் வெட்டி கொலை கணவர் உட்பட மூன்று பேர் கைது நடத்தையில் சந்தேகத்தால் வெறிச்செயல்
ADDED : ஜூலை 05, 2025 01:59 AM

திருநின்றவூர்:ரவுடியுடம் பழகி வந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி கவுன்சிலரை, சரமாரியாக வெட்டி கொன்ற கணவர் உட்பட மூவரை போலீசார் கைது செய்தனர்.
திருநின்றவூர், பெரிய காலனி, மேட்டு தெருவைச் சேர்ந்தவர் ஸ்டீபன் ராஜ், 32; வி.சி., கட்சியின் திருநின்றவூர் நகர செயலர்.
இவர், அதே பகுதியைச் சேர்ந்த கோமதி, 28, என்பவரை காதலித்து, 2015ம் ஆண்டு திருமணம் செய்தார். தம்பதிக்கு மூன்று மகன், ஒரு மகள் உள்ளனர்.
கடந்த 2022ம் ஆண்டு நடந்த உள்ளாட்சி தேர்தலில், திருநின்றவூர் நகராட்சி, 26வது வார்டில், கோமதி போட்டியிட்டு வெற்றி பெற்று கவுன்சிலரானார். நகர வரிவிதிப்பு குழுவின் தலைவராகவும் இருந்தார்.
திருநின்றவூர் ராமதாசபுரத்தை சேர்ந்த, 'ஏ' பிரிவு ரவுடியான ஜோசப் தேவா, 30, என்பவருடன், கோமதிக்கு பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இருவரும் ஆன்லைன் மூலமாக பேசி, பழகி வந்துள்ளனர்.
இருவரும் இணைந்து எடுத்த சில புகைப்படங்கள், கோமதியின் மொபைல்போனில் இருப்பதை, அவரது கணவர் ஸ்டீபன் ராஜின் தம்பி அஜித், 25, பார்த்து, ஸ்டீபன் ராஜிடம் தெரிவித்துள்ளார்.
இதனால், தம்பதிக்கு இடையே அடிக்கடி பிரச்னை ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், மன உளைச்சலில் இருந்த ஸ்டீபன், நேற்று முன்தினம் கோமதியை, அதே பகுதியில் உள்ள அவரது சித்தி வீட்டிற்கு அனுப்பி உள்ளார்.
ஆனால், நடுக்குத்தகை ஜெயராம் நகரில், ரவுடி ஜோசப் தேவாவும், கோமதியும் பேசிக் கொண்டிருப்பதாக, நேற்று முன்தினம் இரவு ஸ்டீபன் ராஜுக்கு தகவல் கிடைத்தது.
தம்பி அஜித், 25, உறவினர் ஜான்சன், 25, ஆகியோருடன் ஸ்டீபன் ராஜ் அங்கு சென்றுள்ளார். அவர்களை கண்டதும், ரவுடி ஜோசப் தேவா தப்பி ஓடினார்.
அங்கிருந்த கோமதிக்கும், ஸ்டீபன் ராஜுக்கும் இடையே வாக்குவாதம் முற்றியது. ஆத்திரமடைந்த ஸ்டீபன் ராஜ், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால், கோமதியின் தலை, கழுத்து, முதுகு, கை உள்ளிட்ட இடங்களில் சரமாரியாக வெட்டினார்.
ரத்த வெள்ளத்தில் துடி துடித்து கோமதி அங்கேயே உயிரிழந்தார். தகவலறிந்து சென்ற திருநின்றவூர் போலீசார், கோமதியின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக, திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
திருநின்றவூர் வெளிவட்ட சாலை அருகே பதுங்கியிருந்த ஸ்டீபன் ராஜ், அவரது தம்பி அஜித், உறவினர் ஜான்சன் ஆகியோரை, திருநின்றவூர் போலீசார் கைது செய்து விசாரித்தனர். பின் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, நேற்று சிறையில் அடைத்தனர்.