/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
சேதமடைந்த தரைப்பாலத்தில் ஆபத்தான முறையில் பயணம்
/
சேதமடைந்த தரைப்பாலத்தில் ஆபத்தான முறையில் பயணம்
ADDED : மார் 21, 2025 02:41 AM

திருவள்ளூர்:கூவம் ஆற்றில் உடைந்து விழுந்த தரைப்பாலத்தில் பகுதிவாசிகள் ஆபத்தான முறையில் கடந்து வருகின்றனர்.
திருவள்ளூர் வரதராஜபுரத்தில் இருந்து மணவாளநகர் இடையே கூவம் ஆற்றின் குறுக்கே தரைப்பாலம் கடந்த, 50 ஆண்டுக்கு முன் கட்டப்பட்டது.
இந்த தரைப்பாலம் சேதமடைந்ததாலும், குறுக்கே ரயில்வே கேட் இருந்ததாலும், கடந்த 20 ஆண்டுக்கு முன், கூவம் ஆற்றின் குறுக்கே மேம்பாலம் கட்டப்பட்டது.
தற்போது, அந்த மேம்பாலம் வழியாக, பூந்தமல்லி, காஞ்சிபுரம் மற்றும் ஸ்ரீபெரும்புதுார் பகுதியில் இருந்து திருவள்ளூருக்கு வரும் வாகனங்கள் பயணிக்கின்றன.
தரைப்பாலத்தில், வரதராஜபுரம் பகுதிவாசிகள் பயன்படுத்தி வந்தனர். மேலும், ஸ்ரீபெரும்புதுார், ஒரகடம் பகுதியில் உள்ள தொழிற்சாலைகளில் தயாரான கார்கள், சரக்கு ரயிலில் கொண்டு செல்ல, கன்டெய்னர் லாரிகளும் அந்த தரைப்பாலத்தினை பயன்படுத்தி, திருவள்ளூர் ரயில் நிலையத்திற்கு வந்து சென்றது.
இந்நிலையில், கடந்த, 2015ம் ஆண்டு பெய்த பலத்த மழையால், அந்த தரைப்பாலம் இடிந்து விழுந்தது. அதன்பின் அந்த பாலத்தை நெடுஞ்சாலை துறையினர் சீர்படுத்தவில்லை. இதனால், வரதராஜபுரம் பகுதிவாசிகள் சிலர், திருவள்ளூர் செல்வதற்காக, ரயில் நிலையம் சென்று, அங்கிருந்து மற்றொரு தரைப்பாலம் வழியாக மணவாளநகர் வழியாக, பயணித்து வருகின்றனர்.
மேலும், கார்கள் கொண்டு வரும் கன்டெய்னர் லாரிகளும் வர முடியாமல், சரக்கு ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
இந்நிலையில், வரதராஜபுரத்தைச் சேர்ந்த ஒரு சிலர் உடைந்த தரைபாலத்தில் ஆபத்தான முறையில் கடந்து செல்கின்றனர். எனவே, நெடுஞ்சாலை துறையினர் உடைந்த தரைப்பாலத்தை சீரமைக்க வேண்டும் என, வரதராஜபுரம் பகுதிவாசிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.