/
உள்ளூர் செய்திகள்
/
தூத்துக்குடி
/
தேர் மாறன் கல்லறையை மீட்கக்கோரி மீனவர்கள் முற்றுகை
/
தேர் மாறன் கல்லறையை மீட்கக்கோரி மீனவர்கள் முற்றுகை
தேர் மாறன் கல்லறையை மீட்கக்கோரி மீனவர்கள் முற்றுகை
தேர் மாறன் கல்லறையை மீட்கக்கோரி மீனவர்கள் முற்றுகை
ADDED : ஜூன் 01, 2024 02:12 AM

துாத்துக்குடி : துாத்துக்குடியை சேர்ந்த குறுநில மன்னரான பரதவர்ம பாண்டியன், சுதந்திர போராட்டத்திற்காக வீரபாண்டிய கட்டபொம்மன், ஊமைத்துரை, மருது சகோதரர்களுக்கு ஆயுதங்கள் மற்றும் படை வீரர்களை கொடுத்து உதவி உள்ளார். துாத்துக்குடியில் உள்ள புகழ்பெற்ற பனிமய மாதா சர்ச்சுக்கு தேர் அமைத்துக் கொடுத்ததால், தேர் மாறன் என அழைக்கப்படுகிறார்.
இவரது கல்லறை, துாத்துக்குடியில் உள்ள புனித லசால் பள்ளி வளாகத்தில் உள்ளது. கல்லறையை முறையாக பராமரிக்காத நிலையில், அந்த இடத்தில் கட்டுமான பணிகளை மேற்கொள்ள பள்ளி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பரதர் நல தலைமை சங்கம் சார்பில், 100க்கும் மேற்பட்ட மீனவர்கள், லசால் பள்ளியை நேற்று முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதைத் தொடர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடமும், பள்ளி நிர்வாகத்திடமும் காவல் துறையினர் பேச்சு நடத்தினர். ஜூன் 7ல் அதிகாரிகள் முன்னிலையில் பேச்சு நடத்தப்படும் என அவர்கள் உறுதி அளித்தனர். இதனால், போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.
வரலாற்று ஆய்வாளர் நெய்தல் அண்டோ கூறியதாவது:
பரதவர்ம பாண்டியனின் கல்லறை அமைந்துள்ள இடத்தை முறையாக பராமரிக்க வேண்டும். அந்த இடத்தில் மணி மண்டபம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். தேர் மாறனின் நினைவு நாளை அரசு விழாவாக கடைப்பிடிக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.