/
உள்ளூர் செய்திகள்
/
தூத்துக்குடி
/
மாணவிக்கு ரூ.3 லட்சம் தர சட்ட பல்கலைக்கு உத்தரவு
/
மாணவிக்கு ரூ.3 லட்சம் தர சட்ட பல்கலைக்கு உத்தரவு
ADDED : மே 24, 2025 08:23 PM
துாத்துக்குடி:துாத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியை சேர்ந்த பூஜா, சென்னை சட்டப்பல்கலையில் சேர்ந்தார். 70 நாட்கள் மட்டுமே வகுப்புக்கு சென்ற நிலையில், அவருக்கு அரசின் ஸ்கூல் ஆப் எக்ஸலன்ஸ் சட்டக் கல்லுாரியில் பயில வாய்ப்பு கிடைத்து, அங்கு சேர்ந்தார்.
தான் செலுத்திய கல்விக் கட்டணத்தை திரும்ப தருமாறு பல்கலை நிர்வாகத்திடம் பூஜா கேட்டபோது, கட்டணத்தை கொடுக்க மறுத்தனர். வழக்கறிஞர் வாயிலாக நோட்டீஸ் அனுப்பியும் உரிய பதில் கிடைக்காததால், துாத்துக்குடி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் பூஜா வழக்கு தொடர்ந்தார்.
ஆணைய தலைவர் திருநீலபிரசாத், உறுப்பினர்கள் சங்கர், நமச்சிவாயம் ஆகியோர் விசாரணை நடத்தினர். 'மாணவி செலுத்திய கல்விக்கட்டணம் 2 லட்சத்து 65,000 ரூபாய், சேவை குறைபாடு மற்றும் மன உளைச்சலுக்கு நஷ்ட ஈடாக 25,000 ரூபாய், வழக்கு செலவுத் தொகையாக 10,000 ரூபாய் என மொத்தம் 3 லட்சம் ரூபாயை, ஒரு மாதத்திற்குள் வழங்க வேண்டும்' என, அவர்கள் உத்தரவிட்டனர்.