/
உள்ளூர் செய்திகள்
/
தூத்துக்குடி
/
தேடப்பட்ட கொள்ளையன் துப்பாக்கி முனையில் கைது
/
தேடப்பட்ட கொள்ளையன் துப்பாக்கி முனையில் கைது
ADDED : மே 27, 2025 04:26 AM

துாத்துக்குடி; தென்மாவட்ட போலீசாரால் தேடப்பட்டு வந்த முகமூடி கொள்ளையன், துப்பாக்கி முனையில் கைது செய்யப்பட்டார்.
திருநெல்வேலி மாவட்டம், களக்காடு அருகே இந்திரா காலனியை சேர்ந்தவர் சந்திரகுமார், 34. இவர் மீது திருநெல்வேலி, துாத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி உட்பட தென்மாவட்ட காவல் நிலையங்களில், 70க்கும் மேற்பட்ட கொள்ளை வழக்குகள் உள்ளன.
போலீசார் தேடி வந்த நிலையில், அவர் தலைமறைவாக இருந்து வந்தார். இந்நிலையில், துாத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் தனிப்படை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டபோது, சந்தேகத்திற்கிடமான முறையில் பைக்கில் வந்த சந்திரகுமாரை பிடித்து விசாரணை நடத்தினர்.
போலீசாரை கண்டதும், பைக்கை கீழே போட்டுவிட்டு தப்பியோடிய அவரை, தனிப்படை போலீசார் துப்பாக்கி முனையில் கைது செய்தனர். அவரிடம் இருந்து கொள்ளை சம்பவங்களுக்கு பயன்படுத்தப்படும் சுத்தியல், கத்தி, ஸ்குரு டிரைவர், அரிவாள், கடப்பாறை உள்ளிட்ட ஆயுதங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
வீடு மற்றும் கடைகளில் முகமூடி அணிந்து கொள்ளையடிக்கும் பழக்கம் கொண்ட சந்திரகுமார், போலீசாரிடம் பிடிபடாமல் இருக்க, மலைப்பகுதியில் தலைமறைவு வாழ்க்கை நடத்தியது விசாரணையில் தெரியவந்தது. இவரை, 17 கொள்ளை வழக்குகளில் போலீசார் தேடி வந்ததுள்ளனர்.