/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'வேலை வாய்ப்புக்கேற்ற திறன் பயிற்சி அவசியம்!'
/
'வேலை வாய்ப்புக்கேற்ற திறன் பயிற்சி அவசியம்!'
ADDED : ஜூலை 14, 2024 12:53 AM
'வளம் நிறைந்த, நலம் நிறைந்த சமுதாயம் உருவாவது என்பது, இளைஞர்களின் கையில் தான் உள்ளது' என்பது, பொதுவான நியதி. மத்திய, மாநில அரசுகளும் இதைத் தான் வலியுறுத்தி வருகின்றன. அனைத்து துறைகளிலும் அதிவேக வளர்ச்சியை பெற்று வரும் நம் நாட்டில், இளைஞர்கள் தங்களின் திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டியது, அவசியமானதாக மாறியிருக்கிறது.
இக்கருத்தை மையப்படுத்தி தான், ஆண்டுதோறும், ஜூலை, 15ல், 'உலக இளைஞர் திறன் தினம்' கடைபிடிக்கப்படுகிறது. இந்தாண்டின் கருப்பொருள், 'அமைதி மற்றும் வளர்ச்சிக்கான இளைஞர் திறன்கள்' என்பது தான்.
இது குறித்து, திருப்பூர், முதலிபாளையத்தில் இயங்கும், 'நிப்ட் - டீ அடல் இன்குபேஷன்' மைய ஆலோசகர் பெரியசாமி கூறியதாவது:
இளைஞர்கள், உள்ளூர் மற்றும் உலக பொருளாதாரத்துடன் தொடர்புடைய திறன்களை பெற வேண்டியது அவசியமானதாக இருக்கிறது. வேலை வழங்குவோரின் தேவைகளை பூர்த்தி செய்யும் திறமையை இளைஞர்களுக்கு வழங்க வேண்டும். உள்ளடக்கிய மற்றும் நிலையான பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்த, இளைஞர்களின் திறமைகளில் முதலீடு செய்ய வேண்டும்.
இளைஞர்களுக்கு தேவையான திறன்களை வழங்குவதன் வாயிலாக, வேலையின்மை மற்றும் சமத்துவமின்மை குறைந்து, பரந்த மற்றும் பொருளாதார வளர்ச்சி நிறைந்த சமுதாயம் உருவாகும். தொழில்நுட்ப முன்னேற்ற சகாப்தத்தில் ஆட்டோமேஷன், செயற்கை நுண்ணறிவு மற்றும் பிற கண்டுபிடிப்புகள் வாயிலாக, தொழில் மற்றும் வேலையின் தன்மை, சந்தை நிலவரம் மறு வடிவமைப்பு பெறுகிறது. அதற்கேற்ப, இளைஞர்கள் தங்களின் தகவமைப்பு திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
உலக இளைஞர் திறன்கள் தினம், பல ஐக்கிய நாடுகளின் நிலையான வளர்ச்சி இலக்குடன் ஒத்து போகிறது. குறிப்பாக தரமான கல்வி, கண்ணியமான வேலை மற்றும் பொருளாதார வளர்ச்சி என்பது உறுதிப்படுத்தப்பட வேண்டும். வாழ்நாள் முழுக்க கற்றல் வாய்ப்புகளை உருவாக்குவதன் வாயிலாக, உலகளாவிய இலக்குகளை அடைவதற்கான முயற்சியை இளைஞர்கள் மேற்கொள்வர்.
உலக இளைஞர் தினம், திறன் மேம்பாட்டின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் அதே நேரம், தொழில்நுட்பம், தொழிற்கல்வி மற்றும் பயிற்சியை பெறுவதில் இளைஞர்கள் எதிர்கொள்ளும் சவால்களையும் கவனத்தில் கொள்ள வைக்கிறது.
இளைஞர்களுக்கு தொழில் வாய்ப்பு ஏற்படுத்தி, அவர்கள் வெற்றிபெற தேவையான திறன்களை கண்டறிய உதவ வேண்டும். திறன் மேம்பாடு திட்டங்கள் மேம்படுத்தப்பட வேண்டும். திறன் அடிப்படையிலான கல்வியை வழங்க வேண்டும்.
மாற்றத்துக்கு தேவையான திறன் மேம்பாட்டை பாட திட்டங்களில் ஒருங்கிணைத்து, வேலை அடிப்படையிலான கற்றல் வாய்ப்புகளை வழங்க வேண்டும். முதலாளிகளும், இளம் பணியாளர்களுக்கு, பயிற்சி மற்றும் மேம்பாட்டு வாய்ப்புகளை வழங்க வேண்டும்; அவர்களுக்கு பயிற்சி மற்றும் வழிகாட்டுதல் திட்டங்களை செயல்படுத்த வேண்டும்.
தற்போதைய மற்றும் எதிர்கால வேலை வாய்ப்புக்கு தேவையான திறன்களை கொண்ட தரமான கல்வி மற்றும் பயிற்சி வாய்ப்புகளை, அனைத்து இளைஞர்களுக்கும் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.
இவ்வாறு, அவர் கூறினார்.
தரமான கல்வி, கண்ணியமான வேலை மற்றும் பொருளாதார வளர்ச்சி என்பது உறுதிப்படுத்தப்பட வேண்டும். வாழ்நாள் முழுக்க கற்றல் வாய்ப்புகளை உருவாக்குவதன் வாயிலாக, உலகளாவிய இலக்குகளை அடைவதற்கான முயற்சியை இளைஞர்கள் மேற்கொள்வர்