ADDED : ஜூன் 04, 2024 12:56 AM
திருப்பூர்;கொத்தமல்லி தழை விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், லாபத்தை எதிர்பார்த்து கொத்தமல்லியுடன் வேறு தழைகளும் சேர்த்து கட்டி மோசடியாக பலரும் விற்கின்றனர்.
அவ்வப்போது பெய்த மழை, விளைச்சல் பாதிப்பு காரணமாக, கொத்தமல்லி தழை விலை உழவர் சந்தையில் உயர்ந்துள்ளது. கடந்த மாதம் ஒரு கட்டு, 10 முதல், 20 ரூபாய்க்கு விற்று வந்தது. தற்போது, ஒரு கட்டு, 40 முதல், 45 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு மடங்கு விலை அதிகமாக கிடைப்பதால், விளைச்சல் முழுமை பெறாத கொத்தமல்லி தழைகளை கூட, கூடுதல் லாபத்துக்காக பலரும் விற்பனை கொண்டு வருகின்றனர்.
குறிப்பாக, தோட்டங்களில் கொத்தமல்லி தழைகளுடன், புற்கள், கொத்தமல்லி போன்ற வளர்ந்துள்ள வேறு செடி, கொடி வைத்தும் கட்டு கட்டி விடுகின்றனர். கட்டு, 40 ரூபாய்க்கும் கிலோ, 80 ரூபாய் வரை விற்பதால், ஈரம் உலராமல், கட்டில் மண் இருந்தால் கூட, சுத்தம் செய்யாமல் அப்படியே விற்கின்றனர்.
விலை குறையும் போது, மூன்று கட்டு பத்து ரூபாய்க்கு வரும் கொத்தமல்லி தழை, தற்போது கட்டு, 40 ரூபாய்க்கு வரை விற்பதால், கொத்த மல்லி பயிரிட்டுள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதே நேரம், ரசத்துக்கான கொத்தமல்லி விலை, 10 நாளுக்கு மேலாக உயர்ந்து காணப்படுகிறது.