/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நம்பிக்கையுடன் ஜமாபந்தியில் மனு தந்த மக்கள்
/
நம்பிக்கையுடன் ஜமாபந்தியில் மனு தந்த மக்கள்
ADDED : ஜூன் 21, 2024 01:59 AM

திருப்பூர்;வருவாய்த்துறை கணக்குகளை தணிக்கை செய்யும் ஜமாபந்தியில், பொதுமக்கள் பங்கேற்று, நீண்ட நாட்களாக தீர்க்கப்படாத பிரச்னைகளை, ஜமாபந்தி அலுவலரிடம் மனுவாக அளித்துவருகின்றனர். மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுத்து, ஜமாபந்தி மீதான மக்களின் நம்பிக்கையை உறுதி செய்ய வேண்டியது, அதிகாரி களின் கடமை.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஒன்பது தாலுகாக்களில், 1,433 பசலி ஆண்டுக்கான வருவாய் தீர்வாயம் எனப்படும் ஜமாபந்தி நேற்று முதல் துவங்கியது. அந்தந்த தாலுகாவுக்கு நியமிக்கப்பட்டுள்ள அலுவலர்கள், ஜமாபந்தியை நடத்தி வருகின்றனர். 350 கிராமங்களுக்கான வருவாய்த்துறை சார்ந்த கணக்குகள், ஜமாபந்தி அலுவலர்களால் சரிபார்க்கப்பட்டு, ஒப்புதல் அளிக்கப்படுகிறது. பொதுமக்களிடமிருந்து மனுக்கள் பெறப்பட்டு, தீர்வு காணப்படுகிறது.
திருப்பூர் வடக்கு
திருப்பூர் வடக்கு தாலுகா அலுவலகத்தில் மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் புஷ்பாதேவி தலைமையில் ஜமாபந்தி துவங்கியது. தாசில்தார் மகேஸ்வரன் உள்பட வருவாய்த்துறை அதிகாரிகள் பங்கேற்றனர். நேற்று, நெருப்பெரிச்சல், மண்ணரை, தொட்டிபாளையம் கிராமங்களுக்கான ஜமாபந்தி நடந்தது.
நில அளவைக்கு பயன்படுத்தப்படும் கோணக்கட்டை, சங்கிலிகள் கொண்டு வரப்பட்டு, சரியான அளவில் உள்ளனவா என ஜமாபந்தி அலுவலரால் சரிபார்க்கப்பட்டது. திருப்பூர் வடக்கு தாலுகாவில் இன்று, வேலம்பாளையம், கணக்கம்பாளையம், பொங்கு பாளையம், செட்டிபாளையம் கிராமங்களுக்கும் நடக்கிறது.
திருப்பூர் தெற்கு
திருப்பூர் தெற்கு தாலுகா அலுவலகத்தில் நடந்த முகாமில், கலால் உதவி கமிஷனர் ராம்குமார் தலைமையில் ஜமாபந்தி துவங்கியது. தாசில்தார் கவுரிசங்கர் பங்கேற்றார். மங்கலம், ஆண்டிபாளையம், திருப்பூர், வீரபாண்டி, இடுவாய் கிராமங்களுக்கான.
ஜமாபந்தி நடந்தது. இன்று, நல்லுார் பிர்காவுக்கு உட்பட்ட, நல்லுார், முதலிபாளையம், முத்தணம்பாளையம் கிராமங்கள்; வரும் 25ம் தேதி தெற்கு அவிநாசிபாளையம் பிர்காவின் நாச்சிபாளையம், பெருந் தொழுவு, உகாயனுார், வடக்கு அவிநாசிபாளையம், தொங்குட்டிபாளையம், கண்டியன்கோவில், அலகுமலை, தெற்கு அவிநாசிபாளையம் கிராமங்களுக்கு நடைபெறுகிறது.
ஊத்துக்குளி
ஊத்துக்குளி தாலுகாவில், டி.ஆர்.ஓ., ஜெய்பீம் தலைமையில் ஜமாபந்தி துவங்கியது. நேற்று, குன்னத்துார் பிர்காவுக்கு உட்பட்ட, 27 கிராமங்களுக்கு நடந்தது. இன்று, ஊத்துக்குளி பிர்காவுக்கு உட்பட்ட கிராமங்களுக்கான ஜமாபந்தி நடக்கிறது.
பல்லடம்
பல்லடம் தாலுகா அலுவலகத்தில், சப்கலெக்டர் சவுமியா தலைமையில் ஜமாபந்தி நடந்தது. நேற்று, பல்லடம் பிர்காவுக்கு உட்பட்ட 7 கிராமங்களுக்கு நடந்தது; இன்று, கரடிவாவி பிர்காவில் உள்ள 7 கிராமங்கள்; 25ம் தேதி, சாமளாபுரம் பிர்காவில் உள்ள 7 கிராமங்கள்; 26ம் தேதி, பொங்கலுார் பிர்காவில் 8 கிராமங்களுக்கு ஜமாபந்தி நடைபெறுகிறது.
அவிநாசி
அவிநாசி தாலுகா அலுவலகத்தில், தனித்துணை கலெக்டர் (சமூக பாதுகாப்பு திட்டம்) குமாரராஜா தலைமையில் ஜமாபந்தி துவங்கி யுள்ளது. நேற்று, சேவூர் பிர்காவுக்கு உட்பட்ட 12 கிராமங்களின் வருவாய் கணக்குகள் தணிக்கை செய்யப்பட்டன. இன்று, அவிநாசி மேற்கு பிர்காவின் 10 கிராமங்கள்; வரும் 25ம் தேதி அவிநாசி கிழக்கு பிர்காவில் உள்ள 10 கிராமங்கள்; 26ம் தேதி பெருமாநல்லுார் பிர்காவின் 8 கிராமங்களுக்கான ஜமாபந்தி நடைபெற உள்ளது.
காங்கயம்
காங்கயம் தாலுகா அலுவலகத்தில், கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமையில் ஜமாபந்தி நடைபெற்றது. கத்தாங்கண்ணி, கணபதி பாளையம், படியூர், சிவன்மலை, தம்மரெட்டிபாளையம், ஆலாம்பாடி, காங்கயம், வீரணம்பாளையம், வட்டமலை, காடையூர் கிராம வருவாய்த்துறை கணக்குகள் தணிக்கை செய்யப்பட்டன. இரண்டு துாய்மை பணியாளர் குடும்பத்தினருக்கு, இயற்கை மரணம் மற்றும் ஈமச்சடங்கு உதவித்தொகை, தலா 25 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது.
பொதுமக்கள், பட்டா மாறுதல், இலவச வீட்டுமனை பட்டா, இருப்பிடச்சான்று, நில அளவை, பிறப்பு, இறப்பு சான்று, கம்ப்யூட்டர் சிட்டா பெயர் திருத்தம், மின் இணைப்பு, முதியோர், மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, குடிநீர் இணைப்பு, சாலை வசதி, ரேஷன்கார்டு உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜமாபந்தி அலுவலரிடம் மனு அளித்தனர்.