/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நகை பறித்த ஆசாமிகளுக்கு பொதுமக்கள் 'கவனிப்பு'
/
நகை பறித்த ஆசாமிகளுக்கு பொதுமக்கள் 'கவனிப்பு'
ADDED : ஜூலை 29, 2024 10:52 PM
திருப்பூர்:திருப்பூரில், மளிகை கடையில் இருந்த பெண்ணிடம், ஏழு சவரன் நகையை பறித்து சென்ற, இருவருக்கு பொதுமக்கள் தர்மஅடி கொடுத்தனர். அப்போது, நகை பறித்த கும்பல், தடுக்க வந்தவரை கத்தியால் குத்தினர்.
திருப்பூர், பெருந்தொழுவு ரோடு, எம்.ஜி.ஆர்., நகரை சேர்ந்தவர் கார்த்திகா, 31. மளிகை கடை நடத்தி வருகின்றார். கடையில் தனியாக இருந்த போது, பீடி வாங்க வந்த இருவர், கார்த்திகா கழுத்தில் அணிந்திருந்த, ஏழு சவரன் நகையை பறித்து தப்பினர். இதனால், அவர் கூச்சலிட்டார்.
உடனே, அருகிலிருந்தவர்கள் ஓடிச்சென்று, இருவரையும் பிடித்து தர்மஅடி கொடுத்ததால், நகையை திருப்பி கொடுத்தனர். அப்போது, நகை பறித்தவர்களில் ஒருவர், கூட்டத்தில் இருந்த நடராஜன், 44 என்பவரை கத்தியால் வயிற்று பகுதியில் கிழித்தார். காயமடைந்த அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார். தகவலறிந்து சென்ற நல்லுார் போலீசார் விசாரித்தனர்.
அதில், முதலிபாளையத்தை சேர்ந்த மோகன்ராஜ், 40 மற்றும் அப்துல் சலாம், 44 என்பதும், பெண்ணிடம் நகையை பறிக்க முயற்சித்ததும் தெரிந்தது. இருவரையும், நல்லுார் போலீசார் கைது செய்தனர்.