/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மழை தந்த கொடை... பசுமைக்கு ஏது தடை?
/
மழை தந்த கொடை... பசுமைக்கு ஏது தடை?
ADDED : ஜூன் 02, 2024 12:54 AM

சில நாட்களுக்கு முன் தலையில் நெருப்பு வைத்தது போல், வெயிலின் தாக்கத்தை உணர முடிந்தது. திருப்பூரின் வெப்பநிலை, 107 பாரன்ஹீட் வரை பதிவாகியது. திருப்பூர் - ஈரோடு, ஈரோடு - திருப்பூர் ரயில் தண்டவாளத்தின் ஓரத்தில் வளர்ந்திருந்த புற்கள், காய துவங்கின.
முற்றிலும் புற்கள் காய்ந்து விட்டதால், சில நேரங்களில் தீப்பற்றி எரிந்த சம்பவங்களும் நடந்தது. காய்ந்து, முழுதும் சூடேறிய புற்கள் என்பதால், 50 முதல், 100 மீ., வரை கொழுந்து விட்டு எரிந்ததால், ரயிலில் பயணித்த பயணிகளே பீதியாகினர்.
அதிகபட்ச வெப்பம், வெப்ப அலை காரணமாக, ஜன்னல் ஓரம், படிக்கட்டு அருகில் நின்று பயணித்தவருக்கு தீக்கிரையான புற்களில் இருந்து பரவிய ஜூவாலை முகத்தில் 'அறைந்தது'. ஆனால், இயற்கைக்கு நிகர் இயற்கையே தான் என்பதை மெய்ப்பிக்கும் வகையில், மே இரண்டாவது வாரத்துக்கு பின் துவங்கியது மழை. அவ்வப்போது இடி, மின்னலுடன் கனமழை, துாறல், நாள் முழுதும் மழைப்பொழிவு என மாறி, மாறி பதிவாகியதால், காய்ந்த, தீக்கிரையான நிலத்துக்கு மழைநீர் வரப்பிரசாதமாக மாறியது.
மழைநீர் தந்த பயனால், புற்கள் வளர துவங்கி, பசும்புல் மேலெழுந்தது. தற்போது, ரயில்வே ஸ்டேஷன் துவங்கி, முதல் மட்டும் இரண்டாவது ரயில்வே கேட், எஸ்.ஆர்.சி., மில் பாலம் பகுதியில் பசுமை சூழ்ந்த இயற்கை சூழல் திரும்பியுள்ளது. வழிநெடுகிலும், இருபுறமும், ரயில் பயணத்தின் போது ஜன்னல் ஓரங்களில் எங்கு திரும்பினாலும் பசுமை பரப்பு பளிச்சிடுகிறது. ரயிலில் செல்பவர் மட்டுமின்றி, அவ்வழியை கடந்து செல்வோர் பசுமையை ரசிக்கின்றனர்.
இயற்கைக்கு நிகர் இயற்கை மட்டுமே!