/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'ரீல்ஸ்' மோகத்தில் 'ரிஸ்க்' ;ஆபத்து அறியாத இளைஞர்கள்
/
'ரீல்ஸ்' மோகத்தில் 'ரிஸ்க்' ;ஆபத்து அறியாத இளைஞர்கள்
'ரீல்ஸ்' மோகத்தில் 'ரிஸ்க்' ;ஆபத்து அறியாத இளைஞர்கள்
'ரீல்ஸ்' மோகத்தில் 'ரிஸ்க்' ;ஆபத்து அறியாத இளைஞர்கள்
ADDED : ஜூலை 14, 2024 12:26 AM

பல்லடம்:இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சி, பல்வேறு நல்ல விஷயங்களுக்கு பயன்பட்ட போதும், சிலர் தவறான விஷயங்களுக்கு பயன்படுத்துவதும் அதிகரித்துள்ளது. தாங்கள் செய்வது சாகசம் என்ற எண்ணத்துடன், சிலர், சமூக வலைதளங்களில் வீடியோக்களை வெளியிட்டு வைரலாக்க முயல்கின்றனர்.
சமீபத்தில், புனேவை சேர்ந்த பெண் ஒருவர், இன்ஸ்டாகிராம் 'ரீல்ஸ்' எடுப்பதற்காக, உயரமான கட்டடத்தின் கூரையிலிருந்து தொங்கும்படி இருக்க, இதை இளைஞர் ஒருவர் வீடியோ எடுக்கிறார். இந்த வீடியோ காட்சிகள் வைரலானதை தொடர்ந்து, நெட்டிசன்கள் பலரும் இதற்கு கண்டனம் தெரிவித்த நிலையில், அவர்கள் மீது வழக்கு பதியப்பட்டது.
இவ்வாறு, சமூக வலைதளங்களில் வீடியோவை வைரலாக்க வேண்டும் என்பதற்காக, இன்றைய இளம் தலைமுறையினர் உயிரை பணயம் வைக்கும் அளவுக்கு ரிஸ்க் எடுக்கின்றனர். அவ்வகையில், பல்லடம் அருகே, தேசிய நெடுஞ்சாலையில் நடந்த சம்பவமும், இன்றைய இளைஞர்களின் போக்கிற்கு உதாரணமாக அமைந்துள்ளது.
பல்லடம் - - வெள்ளகோவில் வரையிலான தேசிய நெடுஞ்சாலை, விரிவாக்கம் செய்யப்பட்டு வருகிறது. இந்த ரோட்டில் வந்த இளைஞர்கள் இருவர், தாங்கள் வந்த பைக்கை நடு ரோட்டிலேயே நிறுத்தினர். தொடர்ந்து, இளைஞர் ஒருவர் பைக் மீது ஏறி நிற்க, மற்றொரு இளைஞர் அதை வீடியோ மற்றும் படங்களாக எடுக்கிறார்.
இதனை, அவ்வழியாக வந்த வாகன ஓட்டி ஒருவர் வீடியோ எடுத்து வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். 'ரீல்ஸ்' வீடியோ எடுக்க வேண்டி, தேசிய நெடுஞ்சாலையில், இளைஞர்கள் செய்த சாகச காட்சிகள் வைரலாகி வருகிறது.