/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ரூ.2 கோடி 'டியூட்டி டிராபேக்' நிலுவை
/
ரூ.2 கோடி 'டியூட்டி டிராபேக்' நிலுவை
ADDED : ஜன 16, 2024 11:40 PM
திருப்பூர்:நிலுவையில் உள்ள, 2 கோடி ரூபாய் அளவிலான, 'டியூட்டி டிராபேக்' தொகையை பெற, சம்பந்தப்பட்ட ஏற்றுமதியாளர் விண்ணப்பிக்கலாம் என, சுங்கவரித்துறை அழைப்புவிடுத்துள்ளது.
ஏற்றுமதியாகும் பொருட்கள் உற்பத்தியின் போது, பல்வேறு படிநிலைகளில், வரி செலுத்தப்படுகிறது. உற்பத்தி பொருளின் மதிப்பு வரி செலவுடன் சேர்த்து நிர்ணயிக்கப்படுகிறது. இருப்பினும், ஏற்றுமதியாகும் பொருட்களுடன், வரி தொகையும் ஏற்றுமதி செய்யப்படுவதில்லை.
அதன்படி, 'டியூட்டி டிராபேக்' என்ற பெயரில், வரியினங்களை திருப்பி கொடுக்கும் சலுகை அறிமுகம் செய்யப்பட்டது. கடந்த சில ஆண்டுகளாக, திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதி வர்த்தகம் மந்தமாக இருப்பதால், 'டியூட்டி டிராபேக்' மட்டுமே, லாப கணக்கில் வைக்கப்படுகிறது.
பின்னலாடைகளை ஏற்றுமதி செய்யும் போது, சுங்கவரித்துறை கணக்கிட்டு, 'டியூட்டி டிராபேக்' வழங்க பரிந்துரைக்கும். அதன் அடிப்படையில், மத்திய அரசும், 'டியூட்டி டிராபேக்' தொகையை ஒதுக்கீடு செய்கிறது; அத்தொகை, சம்பந்தப்பட்ட ஏற்றுமதியாளர்களின் வங்கி கணக்கில், சுங்கவரித்துறை சார்பில் விடுவிக்கப்படுகிறது.
சரக்கு போக்குவரத்து தொடர்ச்சியாக நடந்து கொண்டிருப்பதால், குறிப்பிட்ட இடைவெளியில், 'டியூட்டி டிராபேக்' தொகை விடுவிக்கப்படும். தொகை விடுவிப்பதில் ஏதாவது சிக்கல் இருக்கும்பட்சத்தில், நிலுவையில் வைக்கப்படுகிறது.
அந்தவகையில், சுங்கவரித்துறையில், இரண்டு கோடி ரூபாய் அளவுக்கு, 'டியூட்டி டிராபேக்' நிலுவையில் இருக்கிறது. எனவே, சம்பந்தப்பட்ட ஏற்றுமதியாளர்கள், தேவையான ஆவணங்களை சமர்ப்பித்து பெற்றுக்கொள்ளலாம் என, சுங்கவரித்துறை அறிவித்துள்ளது.
இதுகுறித்து ஏ.இ.பி.சி., அதிகாரிகள் கூறியதாவது:
சுங்கவரித்துறை அறிவித்துள்ளபடி, 435 ஏற்றுமதியாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய, இரண்டு கோடி ரூபாய், 'டியூட்டி டிராபேக்' நிலுவையில் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட ஏற்றுமதியாளர், துாத்துக்குடி துறைமுகத்தில் உள்ள சுங்கவரித்துறை அலுவலகத்தை தொடர்பு கொண்டு விண்ணப்பிக்கலாம்.
விவரங்களுக்கு, www.mcdtutcustoms@gmail.com என்ற இணையதள முகவரியையும், 0421 2232634. 94422 89222 என்ற எண்களில், ஏ.இ.பி.சி., அலுவலகத்தை தொடர்புகொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.

