/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
8 களப்பணியாளரை கண்காணிக்க 9 அதிகாரிகள்? திருமுருகன்பூண்டி நகராட்சியில் தான் இந்த கூத்து!
/
8 களப்பணியாளரை கண்காணிக்க 9 அதிகாரிகள்? திருமுருகன்பூண்டி நகராட்சியில் தான் இந்த கூத்து!
8 களப்பணியாளரை கண்காணிக்க 9 அதிகாரிகள்? திருமுருகன்பூண்டி நகராட்சியில் தான் இந்த கூத்து!
8 களப்பணியாளரை கண்காணிக்க 9 அதிகாரிகள்? திருமுருகன்பூண்டி நகராட்சியில் தான் இந்த கூத்து!
ADDED : ஜன 12, 2024 12:23 AM
திருப்பூர்:திருமுருகன்பூண்டி நகராட்சியில், 8 நிரந்தர துாய்மைப்பணியாளர் மட்டுமே பணியில் உள்ள நிலையில், அவர்களை கண்காணிக்க, 9 பேர், அதிகாரிகள் நிலையில், நியமனம் செய்யப்பட்டிருப்பது வியப்பை ஏற்படுத்திஇருக்கிறது.
பேரூராட்சியாக இருந்த திருமுருகன்பூண்டி, நகராட்சி அந்தஸ்த்தை பெற்றதில் இருந்தே, அடுத்தடுத்த நிர்வாக குளறுபடிகள் தொடர்கின்றன. குறிப்பாக, துாய்மைப்பணி என்பது, சவால் நிறைந்ததாக மாறியிருக்கிறது. 100க்கும் மேற்பட்டோர், தற்காலிக தொழிலாளர்களாக பணிபுரிந்து வந்த நிலையில், அவர்கள் வாயிலாகவே குப்பை சேகரிப்பது, அவற்றை தரம் பிரிப்பது, திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் குப்பைகளை தரம் பிரித்து, அகற்றுவது உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.
இந்நிலையில், சில மாதங்களுக்கு முன், துாய்மைப்பணி தனியார் மயமாக்கப்பட்டது. தற்காலிக துாய்மை பணியாளர்கள் அனைவரும், 'அவுட்சோர்ஸிங்' அடிப்படையில் டெண்டர் எடுத்த தனியார் நிறுவனத்தின் கட்டுப்பாட்டிற்குள் வந்தனர்; அந்நிறுவனத்தினர் வாயிலாகவே, அவர்களுக்கு தற்போது சம்பளம் வழங்கப்படுகிறது.
பணியில் தடுமாற்றம்
பூண்டி நகராட்சியில், 8 பேர் மட்டுமே நிரந்தர துாய்மைப்பணியாளர்களாக, அரசு சம்பளம் பெற்று வருகின்றனர். அலுவலகத்தில் துாய்மைப்பணி, திடக்கழிவு மேலாண்மை என, அவர்களுக்கு பணி பகிர்ந்தளிக்கப்பட்டிருக்கிறது. இதற்கிடையில, 'அவுட்சோர்ஸிங்' அடிப்படையில் துாய்மைப்பணி செய்வோர், வீடு மற்றும் நிறுவனங்களில் இருந்து குப்பைகளை சேகரித்து சென்று, குப்பை கொட்டும் இடத்தில் அவற்றை கொட்டி விடுவர்.
அதனை தவிர்த்து, குப்பைகளை தரம் பிரிப்பது, வார்டுகளில் கழிவுநீர் கால்வாய் அடைப்பை சுத்தம் செய்வது போன்ற பணிகளை மேற்கொள்வதில்லை. இப்பணியை நிரந்தர பணியாளர்கள் தான் செய்ய வேண்டும். இந்நிலையில், துாய்மைப்பணிகளை கண்காணிக்கவும், மேற்பார்வை செய்யவும் நகராட்சி சுகாதார அலுவலர், சுகாதார ஆய்வாளர், கொசு ஒழிப்புப்பணி மேற்பார்வையாளர் மற்றும் 'அனிமேட்டர்' என, நான்கு பணியிடங்கள் ஏற்கனவே நிரப்பப்பட்டுள்ளன.
தற்போது, ராசிபுரம், குமார பாளையம் நகராட்சிகளில் பணிபுரியும், 5 துாய்மைப் பணியாளர்கள், 'மேற்பார்வையாளர்' பதவி உயர்வுடன், பூண்டி நகராட்சிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி, பூண்டி நகராட்சியில் உள்ள, 8 துாய்மைப்பணியாளர்களை கண்காணிக்க, 9 பேர் 'அதிகாரிகள்' நிலையில் இருப்பர். இது, பூண்டி நகரமன்றத்தினரை அதிர்ச்சியடையச் செய்திருக்கிறது.
நகராட்சி தலைவர் குமார் கூறியதாவது:
நகராட்சியில் துாய்மைப்பணி திருப்தியில்லை என, கூறி வருகிறோம். அதோடு, 27 வார்டுகளில் கால்வாய் அடைப்பை சுத்தம் செய்யவும், கால்வாயில் தேங்கும் குப்பை, கழிவுகளை அகற்றவும், 20 பேரை நியமிக்க வேண்டும் என, துறை உயரதிகாரிகளிடம் வலியுறுத்தியுள்ளோம்.
விதிமுறைக்கு உட்பட்டு, நியமித்துக் கொள்ள, நகராட்சிகளின் மண்டல இயக்குனரும் பரிந்துரை செய்திருக்கிறார். ஆனால், அரசின் ஒப்புதல் கிடைக்கவில்லை. இந்நிலையில் 'வெறும், 8 துாய்மைப்பணியாளர்களை கண்காணிக்க, 9 பேர்' என்பது, எப்படி துாய்மைப் பணியை மேம்படுத்தும். இப்பிரச்னையை உயரதிகாரிகள் கவனத்துக்கு கொண்டு செல்லவுள்ளோம். இவ்வாறு, அவர் கூறினார்.

