/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அவிநாசி கோவிலில் புதிய அத்தியாயம்!
/
அவிநாசி கோவிலில் புதிய அத்தியாயம்!
UPDATED : ஜன 10, 2024 05:52 AM
ADDED : ஜன 10, 2024 12:03 AM

வரும், பிப்., 2ல் கும்பாபிேஷக பெருவிழா காணும் கொங்கேழு சிவாலயங்களில், முதன்மையான அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில், திருமாளிகை பத்தி மண்டபம் புதிதாக அமைக்கப்பட்டுள்ளது.
தேவாரம் பாடல்பெற்ற சிவாலயங்களில், இறைவன் சுயம்பு வடிவிலேயே அருள்பாலிக்கிறார். அவ்வகையில், அவிநாசி தலத்தில் உள்ள இறைவனும், சுயம்புமூர்த்தியாகவே அருள்பாலிக்கிறார். காசி விஸ்வநாதரின் வேரில் கிளைத்தவரே அவிநாசியப்பர் என்பது இக்கோவிலின் தனி சிறப்பு.
காசி தீர்த்த கிணற்று நீரில் குளித்து, இங்குள்ள இறைவனை வணங்கினால், காசிக்கு சென்ற பலன் கிடைக்கும் என்பது , பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது. பிரம்மதேவர், 100 ஆண்டுகள் இங்குள்ள சிவனை வழிபட்டுள்ளார்.
வெள்ளையானை 12 ஆண்டுகளும், தாடகை மூன்று ஆண்டுகளும், நாக கன்னிகை, 21 மாதங்களும், வியாதவேடன், 30 நாட்களும், சங்கண்ணன், ஐந்து நாட்களும், ரம்பை ஒரு நாளும், காகம் ஒரு ஜாமமும், எக்ஞகுப்தன் ஒரு முகூர்த்த நேரமும் இறைவனை வழிபட்டு, பேறு பெற்றனர் என வரலாறுகள் கூறுகின்றன.
சிவாலயங்கள், சிவபெருமான் மற்றும் பார்வதி தேவியின் நடுவே, முருகப்பெருமான் சன்னதி இருப்பது போன்ற சோமஸ்கந்த முகூர்த்தமாக அமைக்கப்படும். அவிநாசியில், பார்வதி தேவி, வலப்பாகம் பெற்று கோவில் கொண்டிருந்தாலும், இடையே வள்ளி தெய்வானையுடன் ஸ்ரீ சுப்ரமணியர் சன்னதியுடன், சோமாஸ்கந்த முகூர்த்தத்துடன் புகழ்பெற்றதாக அமைந்துள்ளது.
31 துாண்களுடன் கம்பீரமாக...
சுந்தரமூர்த்தி நாயனாரால் பாடல் பெற்று, முதலையுண்ட பாலனை மீட்ட அவிநாசி திருத்தலம், பல்வேறு வரலாற்று பெருமைகளை கொண்ட புண்ணியதலமாக விளங்குகிறது. இக்கோவில் வளாகத்தில், வடபுறம் மட்டுமே திருமாளிகை பத்தி இருந்தது. தென்புறம் இருந்த திருமாளிகை பத்தி சேதமாகி, பாதியளவு மட்டுமே இருந்தது.
திருப்பணிகளை செய்து, கும்பாபிேஷகம் நடந்த இறையருள் கூட்டியுள்ள நிலையில், கோவிலின் தெற்கு மற்றும் மேபுறம், முழுமையாக திருமாளிகை பத்தி அமைக்க, ஆன்மிக அன்பர்களும் முன்வந்துள்ளனர். அம்மன் சன்னதியை அடுத்துள்ள தென்புற திருமதிலை ஒட்டியபடி, 18 கருங்கல் துாண்களுடன், திருமாளிகை பத்தி மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது.
நிருருதி விநாயகர் சன்னதி அருகே வளைந்து, மேபுற திருமதிலை ஒட்டியபடி, சுப்பிரமணியர் சன்னதி வரையில், 31 கற்துாண்களுடன் திருமாளிகை பத்தி மண்டபம் முற்றிலும் புதிதாக அமைக்கப்பட்டுள்ளது. வடமேற்கு மூலையில், சுப்பிரமணியர் சன்னதி அருகேவளைந்து, வடபுற திருமலை ஒட்டிவாறு, கனசபை மண்டபத்தை தொடும் துாரம்வரை, ஏற்கனவே, பழைய திருமாளிகை பத்தி மண்டபம் அமைந்துள்ளது.
மொத்தத்தில், கும்பகோணம், திருவாரூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சிவாலயங்களை போல், முழுமையான ஆகமவிதிகளை பின்பற்றி, அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில் பிரகாரத்திலும், புதிய பொலிவுடன் திருமாளிகை பத்தி அமைக்கப்பட்டுள்ளது.
எல்லாம்வல்ல அவிநாசியப்பர் அருள்பெற, பிப்., 2ல் அவிநாசியில் சங்கமிக்க பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது.
- நமது நிருபர் -

