/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வனச்சூழலை பாதிக்கும் களைகள் அதிகரிப்பு முழுமையாக அகற்ற திட்டம் தேவை
/
வனச்சூழலை பாதிக்கும் களைகள் அதிகரிப்பு முழுமையாக அகற்ற திட்டம் தேவை
வனச்சூழலை பாதிக்கும் களைகள் அதிகரிப்பு முழுமையாக அகற்ற திட்டம் தேவை
வனச்சூழலை பாதிக்கும் களைகள் அதிகரிப்பு முழுமையாக அகற்ற திட்டம் தேவை
ADDED : ஜன 26, 2024 11:30 PM
உடுமலை: ஆனைமலை புலிகள் காப்பக வனத்தில், இயல்பான வனச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தும், களைச்செடிகளை அகற்ற வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆனைமலை புலிகள் காப்பகம், உடுமலை, அமராவதி வனச்சரகத்தில், 447 சதுர கி.மீ., வனப்பரப்பு உள்ளது. இரு சரகங்களும், 19 வனச்சுற்றுகளாக பிரிக்கப்பட்டு, வனத்துறையினரால் கண்காணிக்கப்படுகிறது.
இந்த வனத்தில், அரிய வகை தாவர உண்ணிகள் அதிகளவு உள்ளன. இயல்பான வனச்சங்கிலி சுழற்சியில், தாவரங்களும், தாவர உண்ணிகளும் முக்கிய பங்கு வகிக்கின்றன.
இந்நிலையில், அரிய வகை தாவரங்களின் வளர்ச்சியை முடக்கும், களைச்செடிகள் பல்வேறு காரணங்களால், வனப்பகுதியில், வேகமாக பரவி வருகிறது.
குறிப்பாக, சீமைகருவேலன் மற்றும் 'லெண்டானா' எனப்படும் உண்ணி செடி தாவரங்கள் இரு வனச்சரகங்களிலும் அதிகரித்துள்ளது.
உடுமலை மற்றும் அமராவதி வனசரகங்களின் மையப்பகுதியில் மூணாறு ரோடு செல்கிறது. இந்த ரோட்டோரத்தில், பல இடங்களில் சீமை கருவேலன் மரங்கள் செழித்து வளர்ந்துள்ளன.
தண்ணீர் தேவைக்காக இடம் பெயரும், யானை மற்றும் மான்கள், அம்மரத்தில் இருந்து விழும் விதைகளை உண்கின்றன.
இவ்வாறு, வனத்தின் அனைத்து பகுதிக்கும் சீமை கருவேல மரங்கள் பரவுகின்றன. இதே போல், பிற தாவரங்களை வளர விடமால் தடுக்கும் லெண்டானா உண்ணி செடிகள் பரவலும் அதிகரித்துள்ளது. இதனால், தாவர உண்ணிகளுக்கு, உணவுத்தட்டுப்பாடு ஏற்படுகிறது.
எனவே, யானை, மான், காட்டெருமை உட்பட விலங்குகள் பல கி.மீ., துாரம் பயணித்து, விளைநிலங்களுக்கு வருகின்றன. மனித - வனவிலங்கு மோதலுக்கு, இதுவும் முக்கிய காரணமாக அமைகிறது.
வனப்பகுதியில், குளிர் மற்றும் கோடை கால வனவிலங்கு கணக்கெடுப்பின்போது, அங்குள்ள களைச்செடிகள் குறித்த விபரங்களும் பதிவு செய்யப்படும். அதன் அடிப்படையில், களைச்செடிகளை அகற்ற, வனத்துறை சார்பில் நிதி ஒதுக்கப்படுகிறது.
ஆனால், குறைந்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, பெயரளவுக்கே, களைச்செடிகள் அகற்றும் பணி மேற்கொள்ளப்படுகிறது. இதில், லெண்டனா செடிகளை, 5 ஆண்டுகள் வரை, கண்காணித்து, வேருடன் அகற்றினால் மட்டுமே கட்டுப்படுத்த முடியும்.
அத்தகைய தொலைநோக்கு திட்டங்கள் எதையும் வனத்துறை செயல்படுத்துவதில்லை. அரிய வகை தாவரங்கள் மற்றும் தாவர உண்ணிகளை பாதுகாக்க, தொலைநோக்கு திட்டத்தை வனத்துறை செயல்படுத்துவது அவசியமாகும்.
வனத்தில் தேவையான உணவு கிடைக்கும் போது, விளைநிலங்களை தேடி வனவிலங்குகள் இடம் பெயர்வது தவிர்க்கப்படும் என இயற்கை ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

