/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
குவிந்த 418 மனுக்கள்; தீர்வு கிடைக்குமா?
/
குவிந்த 418 மனுக்கள்; தீர்வு கிடைக்குமா?
ADDED : பிப் 06, 2024 01:25 AM

திருப்பூர்;குடிநீர் வினியோகத்தில் குளறுபடிகளை களையக் கேட்டு, ராமநாதபுரம் பகுதி பொதுமக்கள், கலெக்டரிடம் மனு அளித்துள்ளனர்.
திருப்பூர் மாவட்ட அளவிலான குறைகேட்பு கூட்டம், கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று நடைபெற்றது. கலெக்டர் கிறிஸ்துராஜ், மக்களிடமிருந்து மனுக்களை பெற்றார். மொத்தம் 418 மனுக்கள் பெறப்பட்டன.
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம்:
மணியகாரம்பாளையத்தில், செம்மேடு பகுதியில், குடியிருப்புகளுக்கு அருகாமையில், 'டாஸ்மாக்' மதுக்கடை அமைந்துள் ளது. மது அருந்திவிட்டு, 'குடி'மகன்கள் தகாத வார்த்தைகளால் திட்டி, தங்களுக்குள் சண்டை போடுகின்றனர்.
இதனால், பெண்கள், பள்ளி மாணவ, மாணவியர் அப்பகுதியை கடந்து செல்ல மிகவும் அச்சப்படுகின்றனர். மதுக்கடையை உடனடியாக வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும்.
ராமநாதபுரம் கிளை இ.கம்யூ., செயலாளர்கருப்பசாமி:
அவிநாசி தாலுகா, ராமநாதபுரத்தில், ஊராட்சி அலுவலகம் வரையிலான மழைநீர் வடிகால், ரோட்டிலிருந்து ஒரு அடி உயரமாக உள்ளது. மழைக்காலங்களில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து, சுகாதார பாதிப்பை ஏற்படுத்துகிறது. அப்பகுதியில் மழைநீர் வடிகால் ஏற்படுத்தித்தர வேண்டும்.
அவிநாசி தாலுகா, ராமநாதபுரம் பகுதி பொதுமக்கள் அளித்த மனு:
அவிநாசி தாலுகா, ராமநாதபுரம் கிராமத்தில், 150க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறோம். போர்வெல் அமைக்கப்பட்டு, குடிநீர் வினியோகத்துக்காக மேல் நிலை தொட்டி கட்டப்பட்டுள்ளது. போர்வெல்லில் இருந்து, மேல்நிலை தொட்டிக்கு தண்ணீர் ஏற்றாமல், தனியார் சிலரின் தோட்டங்களில் உள்ள வீட்டு குடிநீர் இணைப்புகளுக்கு நேரடியாக வினியோகிக்கப்படுகிறது.
இதனால், குடிநீர் பெறமுடியாமல், மக்கள் பரிதவித்துவருகிறோம். மேல்நிலை தொட்டியில் நீரேற்றம் செய்து, பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, குறைகேட்பு கூட்டத்தில் பொதுமக்கள் மனு அளித்தனர்.
பெண் தீக்குளிக்க முயற்சி
சோளிபாளையம், பாட்டையப்பன் நகரை சேர்ந்த ஜெயசுதா, 35. கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்த குறைகேட்பு கூட்டத்தில் மனு அளிக்க வந்தார். திடீரென, பாட்டிலில் கொண்டுவந்த 'தின்னரை' உடலில் ஊற்றிய ஜெயசுதா, தீக்குளிக்க முயற்சித்தார். அவரை, போலீசார் தடுத்து நிறுத்தி, மனு அளிக்கச் செய்தனர்.
தனது தம்பியின் மரணத்தில் சந்தேகம் உள்ள தாகவும், இதுதொடர்பாக உரிய விசாரணை நடத்த வேண்டும். அவரது மொபைல் போனில் உள்ள வாக்குமூலத்தை கோர்ட் ஏற்றுக்கொள்ளவேண்டும். தனது அண்ணனிடமிருந்து, தாயாரின் இறப்பு சான்றிதழை பெற்றுத்தர வேண்டும்' என, மனு அளித்தார்.
ஜெயசுதாவுக்கு மருத்துவ சிகிச்சை அளிப்பதற்காக, அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டார்.