/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
போக்குவரத்து நெரிசலில் சிக்கித்தவித்த ஆம்புலன்ஸ்கள்
/
போக்குவரத்து நெரிசலில் சிக்கித்தவித்த ஆம்புலன்ஸ்கள்
போக்குவரத்து நெரிசலில் சிக்கித்தவித்த ஆம்புலன்ஸ்கள்
போக்குவரத்து நெரிசலில் சிக்கித்தவித்த ஆம்புலன்ஸ்கள்
ADDED : ஜூன் 07, 2025 01:02 AM

பல்லடம்; கோவை, தொழில் வளர்ச்சிக்கு மட்டுமின்றி, மருத்துவ சிகிச்சைகளுக்கும் பெயர் பெற்றது. இங்கு, ஏராளமான நவீன மருத்துவ வசதிகள் கொண்ட மருத்துவமனைகள் அதிக அளவில் உள்ளன.
பல்வேறு மாவட்ட பகுதிகளில் இருந்தும், கோவையில் உள்ள மருத்துவமனைகளுக்கு, நோயாளிகள் பரிந்துரை செய்யப்படுகின்றனர். ஆம்புலன்ஸ்கள் மூலம் கோவைக்கு வரும் நோயாளிகளுக்கு, பல்லடம் வழியாக செல்லும் தேசிய நெடுஞ்சாலை பிரதான வழித்தடமாக உள்ளது.
குறிப்பாக, மதுரை, திருச்சி, கரூர் உள்ளிட்ட தென் மாவட்ட பகுதிகளிலிருந்து வரும் ஆம்புலன்ஸ்கள், பல்லடம் வழியாகவே சென்றாக வேண்டும். இதன் காரணமாக, பல்லடம் தேசிய நெடுஞ்சாலை வழியாக, தினசரி நுாற்றுக்கணக்கான ஆம்புலன்ஸ்கள் வந்து செல்கின்றன.
பல்வேறு நகரங்களைக் கடந்து வரும் உயிர் காக்கும் ஆம்புலன்ஸ்கள், பல்லடம் நகரை கடக்க போராட வேண்டியுள்ளது. விபத்தினால் பாதிக்கப்பட்டவர்கள், கர்ப்பிணி பெண்கள், குழந்தைகள் என, எத்தனையோ பேர் அவசர சிகிச்சைகளுக்காக ஆம்புலன்ஸ்களில் அழைத்துச் செல்லப்படுகின்றனர்.
ஆனால், பல்லடத்தில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலால், உயிர் காக்கும் ஆம்புலன்ஸ்களின் போராட்டமும் பாதிக்கப்படுகிறது.
ரோடு முழுவதும் வாகனங்கள் நிரம்பி வழிவதால், வாகன ஓட்டிகள் ஆம்புலன்ஸ்களுக்கு வழி விட நினைத்தாலும், அது சாத்தியமற்றதாகி விடுகிறது.
புறவழிச் சாலை உள்ளிட்ட மாற்று வழித்தடம் இல்லாததாலும், மேம்பாலம் உள்ளிட்ட கோரிக்கைகள் நிறைவேறாமலும் பல்லடம் நகரம் அல்லோலப்பட்டு வருகிறது. போதிய வழித்தடம் இன்றி உயிர்காக்கும் ஆம்புலன்ஸ்களும் இதனால் பாதிக்கப்படுவது வேதனைக்குரியதாக உள்ளது.