/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பி.ஏ.பி., மூன்றாம் மண்டல பாசனம் நாளையுடன் நிறைவு! ஆக.,ல் அடுத்த பாசனம் துவங்கும்
/
பி.ஏ.பி., மூன்றாம் மண்டல பாசனம் நாளையுடன் நிறைவு! ஆக.,ல் அடுத்த பாசனம் துவங்கும்
பி.ஏ.பி., மூன்றாம் மண்டல பாசனம் நாளையுடன் நிறைவு! ஆக.,ல் அடுத்த பாசனம் துவங்கும்
பி.ஏ.பி., மூன்றாம் மண்டல பாசனம் நாளையுடன் நிறைவு! ஆக.,ல் அடுத்த பாசனம் துவங்கும்
ADDED : ஜூலை 01, 2025 10:23 PM

உடுமலை; பி.ஏ.பி., மூன்றாம் மண்டல பாசனத்தின் கீழ், கோவை, திருப்பூர் மாவட்டத்திலுள்ள 94,362 ஏக்கர் நிலங்களுக்கு, 5 சுற்றுக்கள் நீர் வழங்கப்பட்டு நாளை நிறைவு செய்யப்படுகிறது. அடுத்து 4ம் மண்டல பாசனத்திற்கு நீர் திறக்க ஆயத்த பணிகளை நீர் வளத்துறை அதிகாரிகள் துவக்கியுள்ளனர்.
பி.ஏ.பி., பாசனத்திட்டத்தின் கீழ், கோவை, திருப்பூர் மாவட்டத்திலுள்ள, 3.77 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. இந்நிலங்கள் நான்கு மண்டலமாக பிரித்து, சுழற்சி முறையில் நீர் வழங்கப்படுகிறது.
இதன் அடிப்படையில், பி.ஏ.பி., மூன்றாம் மண்டல பாசனத்திற்கு, கடந்த ஜன., 29ம் தேதி முதல், ஜூன் 13 வரை, 135 நாட்களில், உரிய இடைவெளிவிட்டு, ஐந்து சுற்றுக்களில், 10 ஆயிரத்து, 300 கன அடி நீர் திறக்க அரசு உத்தரவிட்டது.
இதன் வாயிலாக, கோவை மாவட்டம், பொள்ளாச்சி, சூலுார் தாலுகாவிலுள்ள, 22 ஆயிரத்து, 801 ஏக்கர் நிலங்கள், திருப்பூர் மாவட்டத்தில், உடுமலை, மடத்துக்குளம், தாராபுரம், பல்லடம், திருப்பூர், காங்கயம் தாலுகாவிலுள்ள, 71 ஆயிரத்து, 561 ஏக்கர் நிலங்கள் என, இரு மாவட்டங்களிலுள்ள, 94 ஆயிரத்து, 362 ஏக்கர் நிலங்களுக்கு, திருமூர்த்தி அணையிலிருந்து, ஜன.,29 முதல் நீர் வழங்கப்பட்டது.
பாசன காலம் நீட்டிப்பு
முதல் இரண்டு சுற்றுக்கள் இடைவெளியின்றி நீர் வழங்கப்பட்டது. மூன்றாம் சுற்றுக்கு நீர் வழங்கும் போது, திட்ட தொகுப்பு அணைகளிலிருந்து காண்டூர் கால்வாய் வழியாக நீர் கொண்டு வரப்படும் சர்க்கார்பதி மின் உற்பத்தி நிலையத்தில், இயந்திரங்கள் பழுது ஏற்பட்டது.
இதனால், நீர் மட்டம் குறைந்து, நீர் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டது. கடைசி இரண்டு சுற்றுக்கள் இடைவெளியின்றி வழங்கப்பட்ட நிலையில், இடையில் ஏற்பட்ட தாமதம் காரணமாக, பாசன காலம் நீடிக்கப்பட்டு, ஜூலை மாதம் வரை நீர் வழங்க அரசு அனுமதியளித்தது.
இதன் அடிப்படையில், 5 சுற்றுக்கள் நீர் வழங்கப்பட்டு, நாளை (3ம் தேதி) மூன்றாம் மண்டல பாசன காலம் நிறைவு செய்யப்படுகிறது.
தொடர்ந்து, காண்டூர் கால்வாய், பிரதான கால்வாய் மற்றும் பகிர்மான கால்வாய்கள் பராமரிப்பு மேற்கொள்ளப்பட்டு, ஆக., மாதம் நான்காம் மண்டல பாசனத்திற்கு நீர் திறக்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
நீர் வளத்துறை அதிகாரிகள் கூறியதாவது : பி.ஏ.பி., மூன்றாம் மண்டல பாசனத்திற்கு, 5 சுற்றுக்கள் நீர் வழங்கப்பட்டு, நாளை காலை திருமூர்த்தி அணையிலிருந்து நீர் திறப்பு நிறுத்தப்பட்டு, நிறைவு செய்யப்படுகிறது.
தற்போது, மண்டல பாசனம் நிறைவு பெற்றுள்ளதால், சர்க்கார்பதி நீர் மின் உற்பத்தி நிலையத்தில், ஒரு மாதம் பராமரிப்பு பணி மேற்கொள்ளப்படுகிறது.
பைபாஸ் வழியாக வரும், 15ம் தேதி வரை, காண்டூர் கால்வாய் வழியாக, வினாடிக்கு, 500 கன அடி வரை, திருமூர்த்தி அணைக்கு நீர் கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது.
தொடர்ந்து, காண்டூர் கால்வாய் மற்றும் பாசன வினியோக கால்வாய்கள் சீரமைக்கும் பணி மற்றும் மடைகள் மாற்றி அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு, ஆக., மாதத்தில் நீர் திறக்கப்படும்.
தென்மேற்கு பருவ மழை தீவிரமடைந்து, திட்ட தொகுப்பு அணைகள் வேகமாக நிரம்பி வரும் நிலையில், உப்பாறு, வட்டமலைக்கரை அணைகளுக்கு நீர் திறக்க அப்பகுதி விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
நீர் இருப்பு மற்றும் அரசு உத்தரவை பொருத்து நடவடிக்கை எடுக்கப்படும். பருவ மழை காரணமாக, நடப்பாண்டு முன்னதாகவே, நான்காம் மண்டல பாசனத்திற்கு நீர் திறக்க வாய்ப்புள்ளது.
இவ்வாறு, தெரிவித்தனர்.
நீர் இருப்பு நிலவரம்
நேற்று காலை நிலவரப்படி, திருமூர்த்தி அணையில் மொத்தமுள்ள, 60 அடியில், 43.11 அடி நீர்மட்டம் இருந்தது. மொத்த கொள்ளளவான, 1,935.25 மில்லியன் கனஅடியில், 1,257.83 அடி நீர்இருப்பு இருந்தது.
அணைக்கு வினாடிக்கு, காண்டூர் கால்வாய் வழியாக,460 கனஅடி நீரும், பாலாறு வழியாக, 32 கனஅடி நீர் என மொத்தம், 492 கனஅடி நீர் வரத்து இருந்தது. அணையிலிருந்து, பிரதான கால்வாய் வழியாக, வினாடிக்கு, 277 கனஅடி நீரும், குடிநீர், இழப்பு என, 29 கனஅடி நீர் என, 306 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டிருந்தது.