/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மாட்டுப் பொங்கல் பண்டிகை கோலாகலம் 'வாங்க பட்டியாரே...' : உழவரின் நண்பனுக்கு நன்றி கூறிய விழா
/
மாட்டுப் பொங்கல் பண்டிகை கோலாகலம் 'வாங்க பட்டியாரே...' : உழவரின் நண்பனுக்கு நன்றி கூறிய விழா
மாட்டுப் பொங்கல் பண்டிகை கோலாகலம் 'வாங்க பட்டியாரே...' : உழவரின் நண்பனுக்கு நன்றி கூறிய விழா
மாட்டுப் பொங்கல் பண்டிகை கோலாகலம் 'வாங்க பட்டியாரே...' : உழவரின் நண்பனுக்கு நன்றி கூறிய விழா
UPDATED : ஜன 17, 2024 01:41 AM
ADDED : ஜன 16, 2024 11:43 PM

திருப்பூர்;உழவுக்கு நன்றி சொல்லும் தைப்பொங்கல் திருநாளில், நேற்று மாட்டுப் பொங்கல் கொண்டாடப்பட்டது.
விவசாய நிலங்களில், உழவு பணிக்கு காளை மாடுகள் அதிகளவில் பயன்படுத்தப்படுகின்றன. அவ்வகையில், விவசாயிகளின் தோழனாக விளங்கும் கால்நடைகளுக்கு, நன்றி சொல்லும் விதமாக, நேற்று மாட்டுப் பொங்கல் கொண்டாடப்பட்டது.
மாடுகளை வளர்ப்போர் ஆற்றங்கரை, நீர்நிலை உள்ளிட்ட இடங்களுக்கு அவற்றை அழைத்துச் சென்று, குளிப்பாட்டி, கொம்புகளில் வர்ணம் பூசி, சலங்கை, காதோலை, கருகமணி உள்ளிட்ட ஆபரணங்கள் அணிவித்து, அழகுப்படுத்தினர். தோட்டங்களில் பட்டி அமைத்து, பொங்கல் வைத்து வழிபாடும் நடத்தினர்.
குடும்ப விழா
'வாங்க பட்டியாரே...' என, மாடுகளை அழைத்து, பாடல் பாடி கொண்டாடி மகிழ்ந்தனர். குங்குமம், மஞ்சள் மற்றும் மாவிலை கலந்த நீரை அவற்றின் மீது தெளித்து, 'எல்லா தீமைகளில் இருந்தும் அவற்றை காக்க வேண்டும்' என, கிருஷ்ணர் மற்றும் இந்திரன் தெய்வங்களை வழிபட்டனர்.
அதன்பின், ஆரத்தி எடுத்து, சர்க்கரை மற்றும் வெண் பொங்கல் சமைத்து, அவற்றுடன் செங்கரும்பு, பழ வகைகளை மாடுகளுக்கு படையலிட்டு, அவற்றை பூஜித்த பின், மாடுகளுக்கு உணவாக வழங்கினர்.
குடும்பத்தினர் மட்டுமின்றி, அவர்களது உறவினர்கள், நண்பர்கள் என குடும்ப விழாவாக, மாட்டுப் பொங்கல் பல இடங்களில் கொண்டாடப்பட்டது.
வீடுகளில் மாடுகள் இல்லாதவர்கள், மாட்டுப் பொங்கலன்று, முன்னோரை வழிபடும் பழக்கம் இருந்து வருகிறது. மறைந்த, தங்களின் முன்னோர்க்கு பிடித்த உணவுகளை சமைத்து, அவர்களுக்கு படையலிட்டு, 'குலத்தை காக்க வேண்டும்' என வேண்டிக் கொள்வர். இதற்கு 'முன்னோர் படையல்' என்று பெயர்.
பட்டி பெருக...பால் பெருக...
திருப்பூர் ஸ்ரீவீரராகவ பெருமாள் கோவில் கோ சாலையில் நேற்று, மாட்டுப்பொங்கல் விழா விமரிசையாக கொண்டாடப்பட்டது. மாட்டுத்தொழுவத்தில் பொங்கல் வைக்கப்பட்டது. அலங்கரிக்கப்பட்ட மாடுகளுக்கு, சர்க்கரை பொங்கல், பழம், கரும்பு படைத்து வழிபட்டனர்.
விவசாயிகள், மாட்டுத்தொழுவத்தில், சிறிய குளம் அமைத்து தண்ணீரை தேக்கி வைத்து கொண்டாடினர். அதற்கு முன் சர்க்கரை பொங்கல், கரும்பு, முறுக்கு வைத்து வழிபாடு நடத்தப்பட்டது. அலங்கரிக்கப்பட்டிருந்த மாடுகளுக்கு சாம்பிராணி துாபம் போட்டு, தீபாராதனை செய்து வழிபட்டனர்.
காளை மாடுகளை நிறுத்தி வைத்து, “வாபூசனம்... அசனம்... கைத்தணி...” என்று கூறிபடி சுற்றி வந்து வணங்கினர்.

