ADDED : ஜன 26, 2024 01:18 AM

திருப்பூர்:சிவன்மலை சுப்ரமணிய சுவாமி கோவிலில் தைப்பூசத் தேரோட்டம் இன்று துவங்கி, மூன்று நாள் நடக்கிறது.
காங்கயம் அடுத்த சிவன்மலையில் உள்ள சுப்ரமணிய சுவாமி கோவிலில் தைப்பூசத் தேர்த்திருவிழா கடந்த 17 ம் தேதி, வீரகாளியம்மன் கோவிலில் கொடியேற்றத்துடன் துவங்கியது. 20ம் தேதி, மலைக்கோவிலுக்கு வீரகாளியம்மன் எழுந்தருளும் நிகழ்வும், அதைத் தொடர்ந்து விநாயகர் வழிபாடு நடத்தி, தேர்த்திருவிழா கொடியேற்றம் நடந்தது.
திருவிழா துவக்கம் முதல் தினமும் சிறப்பு அபிேஷகம், அலங்காரம் மற்றும் மகா தீபாராதனை ஆகிய காலசந்தி பூஜைகள் நடைபெற்றது. நேற்று கால சந்தி பூஜையைத் தொடர்ந்து, மைசூர் பல்லக்கில் சுவாமி மலை சுற்றி வலம் வரும் நிகழ்ச்சி நடந்தது. மாலை திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.
இன்று (26ம் தேதி) அதிகாலை மகா அபிேஷகத்துக்குப் பின், காலை 6:00 மணிக்கு சுவாமி திருத்தேர் எழுந்தருளும் நிகழ்ச்சியும், மாலை 4:00 மணிக்கு திருத்தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சியும் நடக்கிறது.
நாளை (27ம் தேதி) திருத்தேர் மலையை சுற்றி வலம் வரும்; நாளை மறுநாள் திருத்தேர் நிலை சேருகிறது. திருவிழாவில், 31ம் தேதி பரிவேட்டை, பிப்., 1ம் தேதி மகா தரிசனமும், 4ம் தேதி மஞ்சள் நீராட்டு விழா முடிந்து, சுவாமி மலைக்கோவிலுக்கு எழுந்தருளும் நிகழ்ச்சியும் நடக்கிறது. அன்று இரவு திருவிழா கொடியிறக்கப்பட்டு தேர்த்திருவிழா நிறைவடையும்.

