/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அடடே... இப்படியும் ஒரு அரசு அலுவலர்!
/
அடடே... இப்படியும் ஒரு அரசு அலுவலர்!
ADDED : ஜன 26, 2024 11:45 PM

அவருக்கென்ன கவர்ன்மென்ட் ஆபீசர். நெனச்சநேரம் வருவார், நெனச்ச நேரம் போவார். அந்த லீவு இந்த லீவுனு, இஷ்டத்துக்கு லீவு எடுத்துக்குவார். அரசு அலுவலர்களைப்பற்றி, மக்கள் மத்தியில் இப்படி ஒரு பொதுவான எண்ணம் நிலவுகிறது.
ஆனால், நடராஜன் போன்று, கடமையே கண்ணாக பணிபுரியும் அரசு அலுவலர்களும் பலர் இருக்கின்றனர். திருப்பூர் மாவட்ட வருவாய்த்துறை சார்பில், சிக்கண்ணா கல்லுாரி மைதானத்தில் நேற்று நடந்த குடியரசு தின விழாவில், சிறப்பாக பணிபுரிந்த அரசு அலுவலர்கள், 298 பேருக்கு பாராட்டு சான்று வழங்கப்பட்டது.
மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலகத்தில் கண்காணிப்பாளராக பணிபுரியும் 59 வயதான நடராஜனுக்கு, ஒருநாள் கூட மருத்துவ விடுப்பு எடுக்காமல் பணிபுரிந்ததற்காக, பாராட்டு சான்று வழங்கப்பட்டது.
இதுகுறித்து நடராஜன் கூறியதாவது:
எனது சொந்த ஊர் தாராபுரம். 1992ல், ஈரோட்டில், குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலகத்தில், இளநிலை உதவியாளராக பணியில் சேர்ந்தேன். தற்போது, திருப்பூர் மாவட்டத்தில் கண்காணிப்பாளராக பணிபுரிகிறேன். அடிக்கடி விடுப்பு எடுப்பது பிடிக்கவில்லை.
தேவை ஏற்பட்டால், தற்செயல், ஈட்டு விடுப்பு மட்டும் எடுத்துக்கொள்வேன். 32 ஆண்டு பணிக்காலத்தில், 540 நாட்கள் மருத்துவ விடுப்பு உள்ளது; ஆனாலும், ஒருநாள் கூட மருத்துவ விடுப்பு எடுக்காமல் பணிபுரிகிறேன். இதற்காக, பாராட்டு சான்று கிடைத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. வரும் 2025, மார்ச் மாதம் பணி ஓய்வு பெற உள்ளேன்.
ஆண்டவன் அருளால் உடல் நலன் நன்றாக இருந்தால், மருத்துவ விடுப்பு எடுக்காமலேயே பணி நிறைவு செய்துவிடுவேன்' என்றார்.
அரசு பணியை, மக்களுக்கு சேவை செய்ய கிடைத்த வாய்ப்பாக கருதும் நடராஜனுக்கு ஒரு 'சல்யூட்,' வைக்கலாமே!
- நமது நிருபர் -

