/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
234 தொகுதியிலும் தி.மு.க.,வுக்கு வெற்றி; அமைச்சர் சாமிநாதன் 'ஆரூடம்'
/
234 தொகுதியிலும் தி.மு.க.,வுக்கு வெற்றி; அமைச்சர் சாமிநாதன் 'ஆரூடம்'
234 தொகுதியிலும் தி.மு.க.,வுக்கு வெற்றி; அமைச்சர் சாமிநாதன் 'ஆரூடம்'
234 தொகுதியிலும் தி.மு.க.,வுக்கு வெற்றி; அமைச்சர் சாமிநாதன் 'ஆரூடம்'
ADDED : ஜூலை 01, 2025 11:55 PM
திருப்பூர்; அடுத்து வரும் தேர்தலில் 234 தொகுதிகளிலும் தி.மு.க., வெற்றி பெற்று மீண்டும் தமிழகத்தில் ஆட்சி அமைக்கும் என, அமைச்சர் சாமிநாதன் தெரிவித்தார்.
தி.மு.க., தலைமை சார்பில் ஓரணியில் தமிழ்நாடு என்ற பெயரில், கட்சியைப் பலப்படுத்தும் திட்டத்தை அக்கட்சி தலைமை முன்னெடுத்துள்ளது.
இது குறித்த பத்திரிகையாளர் சந்திப்பில், திருப்பூரில் அமைச்சர் சாமிநாதன் கூறியதாவது:
வரும் 3ம் தேதி (நாளை) முதல் தமிழகம் முழுவதும் அனைத்து பகுதியிலும் வீடுகள் தோறும் சென்று மக்களைச் சந்தித்து, தி.மு.க., அரசின் சாதனைகளை மட்டும் மக்களிடம் கொண்டு செல்லாமல், நம் பண்பாடு, கலாசாரம், மரியாதை ஆகியவற்றையும் விளக்கும் வகையில் இந்த நடவடிக்கை இருக்கும். வரும் தேர்தலில் 234 தொகுதிகளிலும் தி.மு.க.,வுக்கு வெற்றி வாய்ப்பு உள்ளது.
கடந்த, 10 ஆண்டுகள் ஆட்சி செய்த அ.தி.மு.க., தமிழகத்துக்கு நன்மை செய்யும் திட்டங்களை செயல்படுத்த கிடைத்த வாய்ப்பை தவற விட்டது. அதிலிருந்து தமிழகத்தை மீட்பதே பெரும் சவாலாக இந்த அரசுக்கு அமைந்து விட்டது.
மத்திய அரசும் உரிய நிதி ஒதுக்கீடு வழங்காமல் மேலும் இந்த அரசுக்கு சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்புவனம் வாலிபர் மரண விவகாரம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சி.பி.சி.ஐ.டி., விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தவறிழைத்தோர் கட்டாயம் தண்டிக்கப்படுவர்.
ஒரு குடும்பத்திலேயே சில பிரச்னைகள் உள்ளது. அது போல் கூட்டணியிலும் கட்சிகளிடம் சில எதிர்பார்ப்புகள் இருக்கும். தேர்தலுக்கு முன்பே அதற்கான தீர்வுகள் எட்டப்படும். அ.தி.மு.க., கூட்டணியில் தே.மு.தி.க., இருந்த போது அக்கட்சி தலைவர்கள் இருவரும் ஒரே மேடையில் பிரசாரம் செய்யவில்லை. இக்கூட்டணியில் பிளவு ஏற்படும் என்று எதிர்பார்க்கும் எதிர்க்கட்சிகளின் எண்ணம் நிறைவேறாது.
மின் வாரியத்தில் புதிய திட்டங்கள், உபகரணங்கள், பராமரிப்பு போன்ற காரணங்களுக்காக சிறிதளவு மின் கட்டணம் உயர்ந்துள்ளது. இது யாருக்கும் பெரிதாக எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. மக்கள் இதை நிச்சயம் ஏற்றுக் கொள்வர்.
மாநகராட்சியில் நிலவும் குப்பை பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், எந்த தரப்பும் பாதிக்காத வகையில் பணிகள் மேற்கெள்ளப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார். பேட்டியின் போது, அமைச்சர் கயல்விழி, மாவட்ட செயலாளர்கள் செல்வராஜ், தினேஷ்குமார் மற்றும் பத்மநாபன் ஆகியோர் உடனிருந்தனர்.