/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பா.ஜ., பெயரில் பரவும் போலி தகவல்
/
பா.ஜ., பெயரில் பரவும் போலி தகவல்
ADDED : ஜன 12, 2024 12:59 AM

திருப்பூர்;'மீண்டும் பா.ஜ., ஆட்சி அமையும் நோக்கில், 'இலவச மொபைல் போன் ரீசார்ஜ் திட்டம்' என்ற வாசகத்துடன் வைரலாகும், 'லிங்க்', மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்தாண்டு லோக்சபா தேர்தல் நடக்கவுள்ள நிலையில், தேர்தலை எதிர்கொள்ள அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன. மத்தியில் ஆளும் பா.ஜ., அரசு, தனது திட்டங்களை மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்கும் பணியில் வேகம் காட்டி வருகிறது.
இந்நிலையில், 'பிஜேபி ப்ரீ ரீசார்ஜ் யோஜனா' என்ற பெயரில், வாட்ஸ் ஆப், டெலிகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில், 'லிங்க்' பரவி வருகிறது.
'இத்திட்டத்தின் கீழ், பிரதமர் மோடி ஓராண்டுக்கு இலவச ரீசார்ஜ் திட்டத்தை அறிவித்துள்ளார். வரும் லோக்சபா தேர்தலில் அதிகளவு வாக்காளர்கள் ஓட்டளிக்க வேண்டும்; மீண்டும், பா.ஜ., அரசு அமைய வேண்டும் என்பதே, இத்திட்டத்தின் நோக்கம்' எனவும், அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
'இச்சலுகை, வரும், 31ம் தேதி வரை மட்டுமே' எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை நம்பி பலரும் அந்த 'லிங்க்'கிற்குள் சென்று தங்களின் மொபைல் எண்களை பதிவிட்டு வருகின்றனர். அதோடு தங்களின் நண்பர்கள், உறவினர்களுக்கும் பரப்பி வருகின்றனர்.
பா.ஜ., நிர்வாகிகள் கூறுகையில், 'இதுபோன்ற 'லிங்க்', அடிக்கடி சமூக வலைதளங்களில் வைரலாகிக் கொண்டு தான் இருக்கிறது.
இது போலியானது. பொதுமக்கள் இதனை நம்ப வேண்டாம். பலரும்நிர்வாகிகளை தொடர்பு கொண்டு, இதுகுறித்து விளக்கம் கேட்டுக் கொண்டு தான் இருக்கின்றனர்,' என்றனர்.

