/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தங்கம்மாள் ஓடையை மீட்க களமிறங்கும் விவசாயிகள்! கழிவு நீர் சாக்கடையாக மாறியதால் வேதனை
/
தங்கம்மாள் ஓடையை மீட்க களமிறங்கும் விவசாயிகள்! கழிவு நீர் சாக்கடையாக மாறியதால் வேதனை
தங்கம்மாள் ஓடையை மீட்க களமிறங்கும் விவசாயிகள்! கழிவு நீர் சாக்கடையாக மாறியதால் வேதனை
தங்கம்மாள் ஓடையை மீட்க களமிறங்கும் விவசாயிகள்! கழிவு நீர் சாக்கடையாக மாறியதால் வேதனை
ADDED : செப் 11, 2025 09:28 PM

உடுமலை; மேற்குத்தொடர்ச்சிமலை அடிவாரத்தில் உருவாகி, உடுமலை நகரம் வழியாக பல கி.மீ., துாரம் பயணித்து, உப்பாறு ஓடையுடன் கலக்கும் பல ஓடைகள் ஆக்கிரமிப்புகளால் காணாமல் போயுள்ளன; முதற்கட்டமாக, நகரில், கழிவு நீர் சாக்கடையாக மாறியுள்ள தங்கம்மாள் ஓடையை மீட்க, விவசாயிகள் ஒருங்கிணைந்து போராட தயாராகி வருகின்றனர்.
உடுமலை அருகே மேற்குத்தொடர்ச்சி மலை அடிவாரத்தில் இருந்து உருவாகும் சிற்றாறுகள் மற்றும் ஓடைகளில் கிடைக்கும் மழை நீரை சேகரிக்கும் வகையில், ஏழு குளங்கள் வரிசையாக அமைந்துள்ளன.
இக்குளங்களில் இருந்து வெளியேறும் உபரி நீர் மற்றும் சுற்றுப்பகுதி கிராமங்களில் இருந்து உருவாகும் ஓடைகள், பல்வேறு பெயர்களில் வடக்கு நோக்கி பயணித்து, உப்பாறு ஓடையுடன் கலந்து வருகிறது.
இதில், பெரும்பாலான ஓடைகள் ஆக்கிரமிப்பால் காணாமல் போயுள்ளது. குறிப்பாக, ஒட்டுக்குளத்தின் உபரி நீர் வெளியேறும் தங்கம்மாள் ஓடை உடுமலை நகரின் பிரதான நீர்நிலையாக இருந்தது.
வடகிழக்கு பருவமழை காலங்களில், இந்த ஓடையில் அதிகளவு உபரி நீர் வெளியேறும். மழைக்காலங்களில் ஏழு குளங்கள் மற்றும் கரையில் அமைந்துள்ள குடியிருப்புகளின் பாதுகாப்புக்கு தங்கம்மாள் ஓடை முக்கிய பங்கு வகிக்கிறது.
இந்நிலையில் நகர வளர்ச்சிக்கு பிறகு, பல்வேறு குடியிருப்புகளின் சாக்கடை கழிவு நீர் நேரடியாக ஓடையில் கலக்கத்துவங்கியது. ஒட்டுக்குளம் அருகே தெளிவாக உள்ள இந்த ஓடை நகரப்பகுதியில், முழுவதுமாக சாக்கடை கால்வாயாக மாறி விட்டது.
உடுமலை நகரில், பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்பட்ட பிறகு, கழிவு நீர் கலப்பது தடைபட்டு, ஓடை நீரோட்டம் மாறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை.
சிறப்புக்குழு அமைக்கணும் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் கூறியதாவது: உடுமலை நகரின் முக்கிய நீர்நிலையாக இருந்த தங்கம்மாள் ஓடை தற்போது, படுமோசமான நிலையில் உள்ளது.
ஆக்கிரமிப்புகளால், பல இடங்களில், ஓடை இருப்பதே தெரியவில்லை. ஒட்டுக்குளத்தில் இருந்து முழுமையாக தங்கம்மாள் ஓடையை துார்வார வேண்டும்; சிறப்பு குழு அமைத்து, ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
உப்பாறு ஓடையுடன் இணையும் அனைத்து ஓடைகளையும் மீட்காவிட்டால், உப்பாறு படுகையும், குடிமங்கலம் ஒன்றியத்திலுள்ள பல கிராமங்களிலும், வறட்சியால் விவசாயத்தை கைவிடும் நிலை ஏற்படும்.
நிலத்தடி நீர் மட்டம் சரிவு, குடிநீர் தட்டுப்பாடு உள்ளிட்ட பிரச்னைகள் தொடர்கதையாகி விடும். ஓடைகளை மீட்க, திருப்பூர் மாவட்ட நிர்வாகத்துக்கும், அரசுக்கும் தொடர்ந்து கோரிக்கை மனு அனுப்பி வருகிறோம்.
இவ்வாறு, தெரிவித்தனர்.
நீண்ட காலமாக நீடிக்கும் இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில், அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில், போராட்டங்களை நடத்தவும், பல கிராம விவசாயிகள் தயாராகி வருகின்றனர்.