/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
உப்பாறு அணைக்கு தண்ணீர் வழங்க விவசாயிகள் கோரிக்கை
/
உப்பாறு அணைக்கு தண்ணீர் வழங்க விவசாயிகள் கோரிக்கை
ADDED : அக் 20, 2025 10:09 PM
உடுமலை: உப்பாறு அணைக்கு பி.ஏ.பி., பிரதான கால்வாயில் இருந்து தண்ணீர் திறக்க வேண்டும் என வழியோர விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
குடிமங்கலம் ஒன்றியம், வாகத்தொழுவு, பெரியபட்டி, பூளவாடி உட்பட, 25க்கும் அதிகமான கிராமங்கள் உப்பாறு ஓடை கரையில் அமைந்துள்ளன. பி.ஏ.பி., பாசனத்தில், இரண்டு மண்டல பாசனம் மட்டும் இருந்த போது, உப்பாறு அணைக்கு, இந்த ஓடை வழியாக, குறிப்பிட்ட இடைவெளியில் தண்ணீர் திறக்கப்படும்.
நான்கு மண்டலங்களாக, பி.ஏ.பி., திட்டம் விரிவுபடுத்தப்பட்ட பிறகு, பிரதான கால்வாயிலிருந்து, உப்பாறு ஓடை வழியாக, தண்ணீர் திறப்பது அரிதாக மாறியது.
குடிமங்கலம், குண்டடம் மற்றும் தாராபுரம் ஒன்றியங்களை சேர்ந்த கிராம மக்கள் அளிக்கும் கோரிக்கை அடிப்படையில், உப்பாறு ஓடையில், தண்ணீர் திறக்கப்படுகிறது.
தற்போது, உப்பாறு ஓடை பகுதியில், போதிய மழை இல்லாமல் வறட்சி நிலவுகிறது.விவசாய நிலங்களில் உள்ள கிணறுகள், போர்வெல்களில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து உள்ள நிலையில், பயிர் சாகுபடிக்கு போதிய தண்ணீர் கிடைக்காமல் விவசாயிகள் அவதிப்படுகின்றனர்.
இந்நிலையில்,பி.ஏ.பி., நான்காம் மண்டல பாசனத்துக்கு திருமூர்த்தி அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
தற்போது பருவமழை பெய்து, அணைகளில் நீர் இருப்பு திருப்தியாக இருப்பதால்,திருமூர்த்தி அணையிலிருந்து, உப்பாறு அணைக்கு தண்ணீர் வழங்க வேண்டும்.இதனால், உப்பாறு படுகை பகுதியில், நிலத்தடி நீர் மட்டம் உயரும்; குடிநீர் தேவைக்கும் உதவியாக இருக்கும் என அப்பகுதி விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

