/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நெடுஞ்சாலைகளில் 'மாயமாகும்' பசுமை மரங்கள்! முதல்வருக்கு புகார் அனுப்ப கணக்கெடுப்பு
/
நெடுஞ்சாலைகளில் 'மாயமாகும்' பசுமை மரங்கள்! முதல்வருக்கு புகார் அனுப்ப கணக்கெடுப்பு
நெடுஞ்சாலைகளில் 'மாயமாகும்' பசுமை மரங்கள்! முதல்வருக்கு புகார் அனுப்ப கணக்கெடுப்பு
நெடுஞ்சாலைகளில் 'மாயமாகும்' பசுமை மரங்கள்! முதல்வருக்கு புகார் அனுப்ப கணக்கெடுப்பு
ADDED : ஜன 16, 2024 10:56 PM

உடுமலை;தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில், நுாற்றுக்கணக்கான பசுமையான மரங்கள் மாயமானது குறித்து கணக்கெடுப்பு நடத்தி, தமிழக முதல்வருக்கு புகார் மனு அனுப்ப, இயற்கை ஆர்வலர்கள் தயாராகி வருகின்றனர்.
உடுமலை பகுதியில், தேசிய, மாநில நெடுஞ்சாலை மற்றும் இதர ரோடுகளில், பல்வேறு காரணங்களுக்காக பசுமையான மரங்கள் வெட்டி அகற்றப்படுவது அதிகரித்துள்ளது.
ரோடு விரிவாக்கத்துக்காக மரங்களை வெட்டினாலும், அதற்கேற்ப புதிதாக மரக்கன்றுகளை, நெடுஞ்சாலைத்துறையினர் நடுவதில்லை. இதே போல், வணிக ரீதியாகவும் மரங்கள் வெட்டப்படுவது அதிகரித்துள்ளது.
புதிதாக வீட்டு மனைகள் அமைக்கும் போதும், கட்டடங்களை விரிவாக்கம் செய்யவும், ரோட்டோரத்திலுள்ள மரங்களின் கிளைகளை முழுவதுமாக வெட்டி விடுகின்றனர். அம்மரங்கள் பசுமையிழந்து கருகியதும், அவற்றை அப்புறப்படுத்தி விடுகின்றனர்.
இவ்வாறு, பல்வேறு ரோடுகளில், நுாற்றுக்கணக்கான மரங்கள் மாயமாகி விட்டது.
தற்போது, கோவை - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில், உடுமலை உட்கோட்டத்தில் மட்டும் 50க்கும் மேற்பட்ட புளியமரங்கள் படிப்படியாக அழிக்கப்பட்டு விட்டன. நகர குடியிருப்புகளிலும், இத்தகைய பணிகள் தொடர்கதையாக உள்ளது.
குறிப்பிட்ட ஆண்டுகள் வளர்ந்த மரங்களை வெட்ட, வருவாய்த்துறையினரிடம் அனுமதி பெற வேண்டும்; அகற்றப்படும் மரங்களை விட கூடுதலாக மரக்கன்றுகளை உடனடியாக நடவு செய்ய வேண்டும் என நீதிமன்ற உத்தரவு இருந்தும் யாரும் பின்பற்றுவதில்லை.
குறிப்பாக பச்சை மரங்களை வெட்ட பல்வேறு விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். இவ்வாறு, நெடுஞ்சாலைத்துறை, வருவாய்த்துறையினர் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் கண்டுகொள்ளாததால், நுாற்றுக்கணக்கான மரங்கள் அழிக்கப்பட்டு, நகரமும், கிராமங்களும் பசுமையிழந்து வருகிறது.
மரம் வளர்ப்பை ஊக்குவிக்க, தமிழக அரசு பல திட்டங்களை செயல்படுத்தினாலும், அந்த நோக்கத்தை வீணடிக்கும் வகையில், மரங்கள் வெட்டப்படுவது அனைத்து தரப்பினரையும் கவலையடையச்செய்துள்ளது.
சமீபத்தில் உடுமலை பகுதியில், வெட்டப்பட்ட மரங்கள் குறித்து கணக்கெடுப்பு நடத்த, இயற்கை ஆர்வலர்கள் திட்டமிட்டுள்ளனர்.
அதில், ' உடுமலை பகுதியில், அனுமதி பெற்று மரங்கள் அகற்றப்பட்டதா, விதிமீறல்கள் மற்றும் சுய லாபத்துக்காக மரங்களை வெட்ட அனுமதித்த அதிகாரிகள், மரங்களின் வேரில் மருந்து ஊற்றி அழிக்கும் நடைமுறை குறித்து பட்டியல் தயாரித்து, முதல்வருக்கு புகார் மனு அனுப்ப திட்டமிட்டுள்ளனர்.

