/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கனமழைக்கு இடியும் வீடுகள்: மலைவாழ் மக்கள் அச்சம்
/
கனமழைக்கு இடியும் வீடுகள்: மலைவாழ் மக்கள் அச்சம்
ADDED : அக் 20, 2025 11:53 PM

உடுமலை: திருமூர்த்திமலை மலைவாழ் குடியிருப்பில், மழையால் சேதமடைந்த வீடுகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என, திருப்பூர் மாவட்ட நிர்வாகத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
உடுமலை அருகே திருமூர்த்திமலை, மலைவாழ் மக்கள் குடியிருப்பில், 114 குடும்பங்களை சேர்ந்த, 300க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். குடியிருப்பில், 50 ஆண்டுகளுக்கு முன் அரசால் கட்டித்தரப்பட்ட வீடுகள் எந்நேரத்திலும் இடிந்து விழும் நிலையில் உள்ளன.
இந்நிலையில், கடந்த 18ம் தேதி இரவு திருமூர்த்திமலை பகுதியில் கனமழை பெய்தது. மலையடிவாரத்தில் அமைந்துள்ள குடியிருப்பு வீடுகளும் கனமழையால் பாதித்தன. சில வீடுகளின் மண் சுவர்கள் அடியோடு இடிந்து விழுந்தது. குடியிருப்பின் பாதை முழுவதும் மண் அரித்து செல்லப்பட்டுள்ளது.
மழை துவங்கியதும், பெரும்பாலான மக்கள் வீடுகளில் இருந்து வெளியேறியதால், மக்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை. வீடுகளின் சேதம் குறித்து வருவாய்த்துறையினர் நேரடியாக ஆய்வு செய்து, திருப்பூர் மாவட்ட நிர்வாகத்துக்கு அறிக்கை சமர்ப்பிக்க உள்ளனர்.
மலைவாழ் மக்கள் கூறுகையில், 'மழைக்காலங்களில், உயிர் பயத்துடன் இடியும் வீடுகளில் வசிக்க வேண்டியுள்ளது. இக்குடியிருப்பில், வீட்டுமனை பட்டா உள்ளவர்களுக்கு, 91 வீடுகள் கட்ட ரூ. 5.67 கோடி திட்ட மதிப்பீடு தயாரித்தும், பல ஆண்டுகளாக அரசு நிதி ஒதுக்கவில்லை. இந்தாண்டு அரசு நிதி ஒதுக்க வேண்டும். தரமான வீடுகள் கட்டிக்கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.

