/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பாதிரி மரத்தை வணங்கினால் கிடைக்குமே அவன் ஆசி!
/
பாதிரி மரத்தை வணங்கினால் கிடைக்குமே அவன் ஆசி!
ADDED : ஜன 16, 2024 11:36 PM
- நமது நிருபர் -
அன்னை பார்வதிதேவி, ஆயிரம் ஆண்டுகாலம் தவமிற்றிய அவிநாசி கோவிலில், தலவிருட்ஷமாக இருக்கும் பாதிரிமரத்தை வழிபட்டு, சாபதோஷம் நீங்க, சுபிட்ஷம் பெறலாம்!
சர்வலோக தயாபரனாகிய சிவபெருமான், ஒவ்வொரு தாண்டவத்தின் போதும், அரிய திருவிளையாடல்களை நிகழ்த்தி, பக்தர்களுக்கு அருள்பாலித்துள்ளார். பிரளய தாண்டவத்தை தொடர்ந்து அக்னிதாண்டவம் நிகழ்த்தினார். அதன்விளைவாக, காசியில் லிங்கரூபம் தோன்றியது.
சிவலிங்கத்தை வழிபட்ட பார்வதி தேவி, நீண்ட தவம் இயற்ற வழிகாட்ட வேண்டுமென, வேண்டினார். சிவபெருமான், அக்னிதாண்டவம் ஆடிய போது, திருமால், பிரம்மா, இந்திரன் உள்ளிட்ட முப்பத்து முக்கோடி தேவர்களும், புக்கொளியூர் சென்று புகுந்தனர். அதே திருப்புக்கொளியூர் தலத்தில் சென்று தவம் இயற்றுவாயாக! என, சிவபெருமானும் விடையளித்தார்.
பார்வதி தேவி, திருப்புக்கொளியூர் என்கிற அவிநாசி திருத்தலம் வந்து, மகிழ், செண்பகம், கொன்றை, பாதிரி, மந்தாரம், பஞ்சவில்வம், மா முதலிய மரங்கள் பூத்துக்குலுங்கிய சோலையில் தவம் இயற்றியதாக, தலபுராணம் கூறுகிறது.
அம்மன் மாமரத்தின் கீழ் அமர்ந்து தவம் இயற்றி, சிவபூஜை செய்ததால், காசி லிங்கத்து வேர் தென்திசையில் பரவி, லிங்கமாக உருவெடுத்ததாக ஐ தீகம். சிவபெருமான், அம்மனுக்கு காட்சியளித்து, தவத்தில் மகிழ்ந்து, அவிநாசி தலத்தில் வலப்பாகம் கொடுத்தருளியதாக அவிநாசி புராணம் கூறுகிறது.
அம்மன் ஆயிரம் ஆண்டுகள் தவம் இயற்றிய அவிநாசி, இன்றும் ஆன்மிக பூமியாகவும், புண்ணிய பூமியாகவும் திகழ்கிறது. அவிநாசி புராணத்தில், தலவிருட்சமாக, பஞ்ச வில்வம் இருந்ததாகவும், இடைப்பட்ட காலத்தில் மாமரம் இருந்ததாகவும் கூறப்பட்டுள்ளது. தற்போது, தலவிருட்சமாக, பாதிரி மரம் இருக்கிறது.
முன்னர் இருந்த பாதிரி மரத்தின் சிறிய பகுதியும், நாகர் மற்றும் சில நடுகட்களும், குருநாதபண்டாரம் சிலையும், வடக்கு நோக்கிய படி, மக்கள் வழிபாட்டுக்கு வைக்கப்பட்டுள்ளது. இத்தலத்தில் உள்ள பாதிரிமர், பிரம்மோற்சவ நேரத்தில் மட்டும் பூக்கும் சிறப்பு கொண் டுள்ளது.
இதுவரை, பாதிரிமரம் பார்வைக்கு மட்டும் இருந்தது, கும்பாபிேஷக திருப்பணி நடந்து வருவதால், மரத்திற்கு சிறிய மேடை அமைத்து, பசுமை நிறைந்த புதிய வழிபாட்டு பகுதியாகவும் திருப்பணிக்குழுவினர் மாற்றியுள்ளனர்.
சாப தோஷம் நீங்கும்...
கோவில் சிவாச்சாரியார்கள் கூறியதாவது: பார்வதி தேவி, தவம் இருக்கும் கோலத்தில், அவிநாசி திருத்தலத்தில், பாதிரி மரத்தம்மன் என்ற பெயரில் வழிபாட்டில் இருக்கிறார். நான்கு துாண்கள் கொண்ட மண்டபம், அர்த்தமண்டபம், கருவறையுடன், பாதிரி அம்மன் சன்னதி அமைந்துள்ளது.
அதே வளாகத்தில், பாதிரி மரம் உள்ளது. சாப தோஷம் மற்றும் பில்லி, சூனிய பாதிப்பு இருப்பவர்கள், 'ஓம் நமசிவாய' எனும் பஞ்சாட்சர மந்திரம் கூறி, பாதிரி மரத்தையும், அம்மனையும் வழிபட்டால், சாபதோஷம் நீங்கும்.
புதிய வழிபாட்டு தலம்
செயல் அலுவலர் பெரிய மருதுபாண்டியன் கூறியதாவது: கோவிலின் தலவிருட்சமாக, பாதிரி மரம் உள்ளது. மரம் அமைந்துள் பகுதியில், சிறிய கல் பீடம் அமைத்து, பசுமையான புல்வெளியுடன், கற்தளம் அமைக்கப்படுகிறது. பாதிரிமரமும் வழிபாட்டு பகுதியாக மாற்றப்படுகிறது. பக்தர்கள், பாதிரி மரத்தம்மனை வழிபடுவது போல், தலவிருட்சமான பாதிரி மரத்தையும் வழிபடலாம்.
கடலுார் மாவட்டத்தில் உள்ள, பாடலீஸ்வரர் கோவிலின் தலவிருட்ஷமாக, பாதிரிமரம் வழிபடப்படுகிறது. அங்குள்ள பாதிரி
மரத்தை வலம் வந்து வணங்கினால், சாபம், தோஷம் நீங்கும் என்ற ஐதீகம் உண்டு

