/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கூட்டுக்குடிநீர் திட்டத்தின் பிரதான குழாய்களில்... வழியெங்கும் உடைப்பு! தொடர் அலட்சியத்தால் வாரியம் மீது அதிருப்தி
/
கூட்டுக்குடிநீர் திட்டத்தின் பிரதான குழாய்களில்... வழியெங்கும் உடைப்பு! தொடர் அலட்சியத்தால் வாரியம் மீது அதிருப்தி
கூட்டுக்குடிநீர் திட்டத்தின் பிரதான குழாய்களில்... வழியெங்கும் உடைப்பு! தொடர் அலட்சியத்தால் வாரியம் மீது அதிருப்தி
கூட்டுக்குடிநீர் திட்டத்தின் பிரதான குழாய்களில்... வழியெங்கும் உடைப்பு! தொடர் அலட்சியத்தால் வாரியம் மீது அதிருப்தி
ADDED : ஜன 26, 2024 12:39 AM

உடுமலை:கூட்டுக்குடிநீர் திட்ட பிரதான குழாயில், பல இடங்களில், உடைப்பு நிரந்தரமாகி நாள்தோறும் பல லட்சம் லிட்டர் குடிநீர் வீணாகியும், குடிநீர் வடிகால் வாரியத்தினர் நடவடிக்கை எடுக்காமல் உள்ளனர்.
உடுமலை திருமூர்த்தி அணையை ஆதாரமாகக்கொண்டு, நகராட்சி, உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் ஒன்றிய ஊராட்சிகளுக்கு, கூட்டுக்குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
இத்திட்டங்களின் பிரதான குழாய்கள், மாநில நெடுஞ்சாலை மற்றும் கிராம இணைப்பு ரோடுகளின் ஓரத்தில், பதிக்கப்பட்டுள்ளன.
விரிவாக்கப்பணி மற்றும் இதர பணிகளுக்காக ரோட்டோரத்தில், தோண்டும் போது, பிரதான குழாயில் உடைப்பு ஏற்படுகிறது. இதில், கிராமப்புற ரோடுகளையொட்டி அமைந்துள்ள குழாய் உடைப்பு சீரமைக்கப்படுவதே இல்லை.
இதனால், நாள்தோறும் பல லட்சம் லிட்டர் குடிநீர் வீணாவது தொடர்கதையாக உள்ளது. குறிப்பாக, உடுமலை ஒன்றியம், ஆலாம்பாளையம் கிராமத்தில் இருந்து, குரல்குட்டை வரும் ரோட்டில் பல இடங்களில், கூட்டுக்குடிநீர் திட்ட பிரதான குழாய் உடைந்து தண்ணீர் வெளியேறி வருகிறது. சீரமைப்பு பணிகளை குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் கண்டுகொள்ளாத நிலையில், ரோட்டோரத்திலும், அருகிலுள்ள விளைநிலங்களிலும், குடிநீர் தேங்கி வீணாகி வருகிறது.
உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் ஒன்றியத்துக்குட்பட்ட பல கிராமங்களில், 20 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே கூட்டுக்குடிநீர் திட்டத்தில் குடிநீர் வினியோகிக்கப்படுகிறது.
இவ்வாறு, கிராமங்களுக்கு வழங்கப்படும் குடிநீரின் அளவை கூட கூடுதலாக பிரதான குழாய் உடைப்பில் தண்ணீர் வீணாகி வருகிறது. இது குறித்து அப்பகுதி ஊராட்சி நிர்வாகத்தினர் புகார் தெரிவித்தாலும், குடிநீர் வடிகால் வாரியத்தினர் நடவடிக்கை எடுப்பதில்லை.
சில இடங்களில், சுயநலத்துக்காகவும், பிரதான குழாய் உடைப்பை பெரிதாக்கி தண்ணீர் திருடப்படுவதாகவும் புகார் உள்ளது. எனவே, திருமூர்த்தி அணை நீரேற்று நிலையம் முதல் கடைக்கோடி கிராமம் வரை, பிரதான குழாய் நிலை குறித்து குடிநீர் வடிகால் வாரியத்தினர் நேரடி ஆய்வு செய்ய வேண்டும்.
நிரந்தர உடைப்புகளை உடனடியாக சீரமைப்பது அவசியமாகும். இல்லாவிட்டால், கோடை காலம் துவங்கும் முன்பே, கிராமங்களில், குடிநீர் தட்டுப்பாடு அதிகரித்து, காலிக்குடங்களுடன் மக்கள் போராடும் நிலை உருவாகும்.

