/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அதிகரிக்கும் நில மோசடி; பின்னணி என்ன?
/
அதிகரிக்கும் நில மோசடி; பின்னணி என்ன?
ADDED : ஜூன் 20, 2025 02:05 AM
பல்லடம்: போலி ஆவணங்களை உருவாக்கி பட்டா மாறுதல் செய்து நில மோசடிகளில் ஈடுபடுவது பல்லடத்தில் அதிகரித்து வருகிறது.
வீடு, கடை, பண்ணை என, எது வாங்கினாலும் அவற்றை முறையாக பதிவு செய்து அதற்கான பட்டா பெற வேண்டும். இந்த பட்டா தான் சொத்துக்கான அடையாள ஆவணம். சொத்துகளை அபகரிக்கும் நோக்கில், முறைகேடாக பட்டா பெறுவது இன்று அதிகரித்துள்ளது.
பூர்வீக சொத்துக்களை வைத்துள்ள சிலர், முறையாக பட்டா பெறாமல், பெயர் மாற்றம் செய்யாமல் அலட்சியத்துடன் இருந்து விடுகின்றனர். பின் நாளில் இது மிகப்பெரும் நில மோசடியாக உருவெடுக்கிறது. முன்னோர் விட்டுச்சென்ற சொத்து ஆவணங்களில் உள்ள ஓட்டைகளை பயன்படுத்தி, புதிதாக பெயர் சேர்ப்பது, நீக்குவது என, பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தி, முறைகேடாக பட்டா பெறுகின்றனர். இதற்காக, போலி பிறப்பு, இறப்பு மற்றும் வாரிசு சான்றுகளை உருவாக்கி, அவற்றின் மூலம், போலி ஆவணங்களையும் தயாரித்து, நில மோசடியில் ஈடுபடுகின்றனர்.
அன்று குறைந்த மதிப்பு
இன்றோ பல கோடி
அன்றைய காலகட்டங்களில் குறைந்த மதிப்புடைய நிலங்கள் இன்று பல கோடி ரூபாய் மதிப்புடையவையாக உள்ளன. நில மோசடியால் பாதிக்கப்பட்டவர்கள், வருவாய்த்துறை, பத்திரப் பதிவுத்துறை, போலீஸ் மாவட்ட நிர்வாக என, பக்கம் பக்கமாக புகார் மனுக்களை கொடுத்தும் நடவடிக்கை இன்றி, நீதிமன்றங்களை நாடுவதும், பின் வழக்கு விசாரணை என, ஆண்டு கணக்கில் அலைவதுமான அவலத்துக்கு ஆளாகின்றனர். இதனால், உண்மையான ஆவணங்கள் இருந்தாலும், பாதிக்கப்பட்டவர்களுக்கு தீர்வு கிடைப்பதில்லை.
உரிய ஆவணங்கள் இருந்தும்...
சமீபத்தில், கரைப்புதுார் ஊராட்சி, அக்கணம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த, 90 வயது மூதாட்டி செல்லம்மாள் என்பவர், உரிய ஆவணங்கள் இருந்தும் பட்டா வழங்கப்படவில்லை என, புகார் மனு அளித்திருந்தார்.
இதற்காக, வருவாய்த்துறை, பத்திரப்பதிவு துறை, போலீஸ் ஸ்டேஷன் என, நடையாய் நடந்த நிலையில், சமீபத்தில், வருவாய் துறை விசாரணைக்காக வரவழைக்கப்பட்டு, மறுநாள் உயிரிழந்தார். இச்சம்பவம், பல்லடம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.