/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மஹா தரிசனம்; மனமுருகிய பக்தர்கள்
/
மஹா தரிசனம்; மனமுருகிய பக்தர்கள்
ADDED : ஜூன் 13, 2025 10:51 PM

திருப்பூர்; மஹா தரிசன நாளான நேற்று, ஸ்ரீநடராஜர், ஸ்ரீசிவகாமியம்மன் மற்றும் ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீவீரராகவப்பெருமாள், சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தனர்.
வைகாசி விசாகத் தேர்த்திருவிழா, திருப்பூர் ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி, ஸ்ரீவீரராகவப்பெருமாள் கோவிலில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது.
தேரோட்டம் நடந்து முடிந்துள்ளது. வெள்ளை குதிரை வாகனத்தில் பரிவேட்டை, தெப்ப உற்சவத்தை தொடர்ந்து, நேற்று மஹாதரிசன விழா நடந்தது.
விஸ்வேஸ்வர சுவாமி கோவிலில், ஸ்ரீநடராஜர்- சிவகாமியம்மனுக்கு, 16 வகை திரவியங்களால் அபிேஷகம் நடந்தது.
தொடர்ந்து, மஞ்சள் பட்டாடை, வெள்ளி கிரீடம், செண்பக மலர் சாற்றிய சிறப்பு அலங்காரத்தில், தனித்தனி சப்பரங்களில் எழுந்தருளினர்.
மதியம், 12:15 மணிக்கு, ஸ்ரீநடராஜர், ஸ்ரீசிவகாமியம்மன் உற்சவமூர்த்திகள், பட்டி விநாயகரை மூன்று முறை வலம் வந்து, திருவீதியுலாவை துவக்கினர். பாண்டியன்கொண்டை அலங்காரத்துடன், ஸ்ரீதேவி பூதேவி சமேத வீரராகவப்பெருமாள், ஆதிசேஷ வாகனத்தில் எழுந்தருளினார்.
மங்கள வாத்திய இசையுடன் தேர்வீதிகளில் திருவீதியுலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். மஹா தரிசனக் காட்சியைக் கண்ணுற்ற பக்தர்கள் மனமுருகினர்.
ஞான மார்க்கம் காட்டும் பிட்சாடனர் கோலம்
பக்தர்களுக்கு ஞானம் அளிப்பதற்காக, சிவபெருமான் நேற்று யாசகம் பெறும் கோலத்தில் திருவீதியுலா சென்று அருள்பாலித்தார். வியாபாரிகள் நாணயம் மற்றும் பணத்தையும், பொதுமக்கள் அரிசியையும் செலுத்தினர். அகந்தை, ஆணவம், பொறாமை போன்ற தீய குணங்களையும், ஆசை, பாசம் முதலியனவற்றை, பக்தர்களிடம் இருந்து யாசகமாக பெறும் சிவபெருமான், நேற்று காலை, 10:00 மணிக்கு, 'பிட்சாடனர்' கோலத்தில் திருவீதியுலா வந்து காட்சியருளினார். 'சிவபெருமானை, பிட்சாடனராக தரிசனம் செய்வதும், யாசகமிடுவதும் வறுமையை நிரந்தரமாக போக்கும்; ஞானமார்க்கத்தை காட்டும்' என, சிவாச்சாரியார்கள் தெரிவித்தனர்.