/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
திருமூர்த்தி கூட்டுக்குடிநீர் திட்ட பராமரிப்பில் அலட்சியம்! வினியோக குளறுபடிகளால் மக்கள் அதிருப்தி
/
திருமூர்த்தி கூட்டுக்குடிநீர் திட்ட பராமரிப்பில் அலட்சியம்! வினியோக குளறுபடிகளால் மக்கள் அதிருப்தி
திருமூர்த்தி கூட்டுக்குடிநீர் திட்ட பராமரிப்பில் அலட்சியம்! வினியோக குளறுபடிகளால் மக்கள் அதிருப்தி
திருமூர்த்தி கூட்டுக்குடிநீர் திட்ட பராமரிப்பில் அலட்சியம்! வினியோக குளறுபடிகளால் மக்கள் அதிருப்தி
ADDED : ஜூன் 12, 2025 09:58 PM
உடுமலை; திருமூர்த்தி அணையை ஆதாரமாகக்கொண்டு செயல்படுத்தப்படும் கூட்டுக்குடிநீர் திட்ட பராமரிப்பில், நிலவும் அலட்சியத்தால் குழாய் உடைப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் தொடர்கதையாக உள்ளது; கிராமங்களிலும் வினியோகம் பாதித்து, மக்கள் போராடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் ஒன்றியங்களில், 72 ஊராட்சிகள் உள்ளன. மேலும், மடத்துக்குளம், தளி, குமரலிங்கம், சங்கராமநல்லுார், கணியூர் உள்ளிட்ட பேரூராட்சிகளிலும், பல ஆயிரக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர்.
மூன்று ஒன்றியங்கள் மற்றும் பேரூராட்சிகளுக்கு, திருமூர்த்தி அணையை ஆதாரமாகக்கொண்ட கூட்டுக்குடிநீர் திட்டங்கள் வாயிலாக, குடிநீர் வினியோகிக்கப்படுகிறது.
குடிமங்கலம் கூட்டுக்குடிநீர் திட்டம், பழைய மடத்துக்குளம் கூட்டுக்குடிநீர் திட்டம் மற்றும் கணக்கம்பாளையம், பூலாங்கிணறு கூட்டுக்குடிநீர் திட்டத்துக்கு மாற்றாக புதிய கூட்டுக்குடிநீர் திட்டமும் தற்போது செயல்பாட்டில் உள்ளது.
குடிநீர் தட்டுப்பாடு
கோடை காலத்திலும், குடிநீர் தட்டுப்பாட்டை தவிர்க்க திருமூர்த்தி அணையில், போதியளவு நீர் இருப்பு செய்யப்படுகிறது. ஆனால், வினியோக குளறுபடிகளால், மடத்துக்குளம், குடிமங்கலம், உடுமலை ஒன்றியத்திலுள்ள பல ஊராட்சிகளில், குடிநீர் தட்டுப்பாடு நிரந்தரமாக உள்ளது.
திருமூர்த்தி நீரேற்று நிலையத்தில் இருந்து, கிராமங்களுக்கு செல்லும் கூட்டுக்குடிநீர் திட்டத்தின் பிரதான குழாய்கள் அடிக்கடி உடைவதும், அதை சீரமைக்க அலட்சியம் காட்டுவதே இப்பிரச்னைக்கு முக்கிய காரணமாகும்.
கூட்டுக்குடிநீர் திட்ட பராமரிப்பு குடிநீர் வடிகால் வாரியத்தின் கீழ், தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
ஒப்பந்தம் பெற்றவர்கள் விதிமுறைகளின் படி, பராமரிப்பு மற்றும் இதர பணியாளர்களை நியமிக்கவில்லை என்பது, ஊராட்சி நிர்வாகத்தினர் குற்றச்சாட்டாக உள்ளது.
உடைப்பு மற்றும் இதர பிரச்னைகள் ஏற்படும் போது, குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரரிடம் புகார் தெரிவித்தால், நடவடிக்கை எடுப்பதில்லை.
தற்போது, மூன்று ஒன்றியங்களிலும், 25க்கும் மேற்பட்ட இடங்களில் பிரதான குழாய் உடைப்பு, கசிவு உள்ளிட்ட பிரச்னைகள் உள்ளது.
போதிய குடிநீர் கிடைக்காமல் பாதிக்கும் மக்கள், கிராமங்களில், பிரதான குழாய் உடைந்து, நாள்தோறும் பல லட்சம் லிட்டர் குடிநீர் வீணாவதை பார்க்கும் போது, வேதனைக்குள்ளாகின்றனர். மேலும், காலிக்குடங்களுடன் போராட்டத்திலும் ஈடுபடுகின்றனர்.
கடந்த சில மாதங்களாக அதிகரித்துள்ள, குடிநீர் வினியோக பிரச்னை குறித்து, திருப்பூர் மாவட்ட நிர்வாகம் கவனம் செலுத்தி, நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குறிப்பாக கூட்டுக்குடிநீர் திட்ட பராமரிப்பில் ஈடுபட்டுள்ள பணியாளர்கள் எண்ணிக்கை, விதிமீறல்கள் குறித்து ஆய்வு நடத்த வேண்டும். சம்பந்தப்பட்ட ஒன்றிய, ஊராட்சி நிர்வாகங்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்தி தீர்வு காண வேண்டும்.
வினியோக சிக்கல்
ஊராட்சிகளுக்கு நிர்ணயிக்கப்பட்ட அளவு குடிநீர் வினியோகிப்பதிலும், தற்போது பிரச்னைகள் ஏற்பட்டு வருகிறது. குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளின் நேரடி கண்காணிப்பு இல்லாததால், நிர்ணயிக்கப்பட்ட அளவை விட, கூடுதலாக சில பகுதிகளுக்கு மட்டும் கூடுதல் குடிநீர் வினியோகிக்கப்படுகிறது.
இதனால், திட்டங்களின் கடைக்கோடியிலுள்ள கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடு நிரந்தரமாக உள்ளது. ஒவ்வொரு கிராமத்திலும், கூட்டுக்குடிநீர் திட்டம் வாயிலாக வினியோகிக்கப்படும் குடிநீர் அளவு குறித்து, வெளிப்படையாக தகவல் பலகை அமைத்து வெளியிட்டால் மட்டுமே, நிர்வாக குளறுபடிகளுக்கு தற்காலிக தீர்வு கிடைக்கும்.