/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நிலாச்சோறு வழிபாடு: சிறுமியர் உற்சாகம்!
/
நிலாச்சோறு வழிபாடு: சிறுமியர் உற்சாகம்!
ADDED : ஜன 26, 2024 01:29 AM

திருப்பூர்;தைப்பூசம் முன்னிட்டு கிராமங்களில் பெண்கள், கும்மியடித்து, பாடல் பாடி நிலாச்சோறு வழிபாடு நடத்தினர்.
தமிழகத்தில், குறிப்பாக கொங்கு மண்டலத்தில் தை மாதத்தில் நிலாச்சோறு என்ற வழிபாட்டு முறை பின்பற்றப்படுகிறது. தைப்பூசத் தேர்த்திருவிழா முன்னிட்டு, தை மாத பவுர்ணமி நிலாவை வரவேற்று வழிபாடு செய்யும் வகையில், நிலாச்சோறு வழிபாடு நடத்தப்படுகிறது.
அவ்வகையில், திருப்பூர், அவிநாசி உள்ளிட்ட சுற்றுப்பகுதியில் உள்ள பல்வேறு கிராமங்களில் கோவில் திடல் உள்ளிட்ட பொது இடத்தில் பெண்கள் இந்த வழிபாடு நடத்தினர்.
பவுர்ணமிக்கு ஒரு வாரம் முன்பிருந்து, சாணத்தில் பிள்ளையார் செய்து, அதன் உச்சியில் அருகம்புல், வெள்ளை எருக்கம்பூ வைத்து, நவதானியம் உள்ளிட்டவை படைத்து வழிபாடு செய்வர்.
அந்த பிள்ளையாரை சுற்றிலும் கோலமிட்டு, அங்கு தங்கள் வீடுகளிலிருந்து கொண்டு வந்த உணவை சுற்றிலும் வைப்பர். அதன்பின், அவற்றை சுற்றி வந்து பாடல் பாடி, கும்மியடித்து நிலாவை பூமிக்கு வரவேற்கும் விதமாக வழிபாடு செய்வர்.
அதன்பின், நிலா தங்களுடன் அமர்ந்து உணவருந்துவதாக கருதி அதே இடத்தில் தாங்கள் கொண்டு வந்த உணவு வகைகளை பகிர்ந்து உண்பர். அவ்வகையிலான நிலாச்சோறு வழிபாடு வழக்கம் போல் நடப்பாண்டும் பல்வேறு கிராமங்களில் நடைபெற்றது.
பெரும்பாலான பகுதிகளில் இந்த வழிபாடு ஒன்பது நாள் என்ற அடிப்படையில், பவுர்ணமி மற்றும் தைப்பூச நாளில் நிறைவடையும். ஒரு சில பகுதிகளில் இது, 16 நாள் என்ற அளவில் நடைபெறும்.

