/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
இப்படி சொதப்பிட்டீங்களே ஆபீசர்ஸ்...!
/
இப்படி சொதப்பிட்டீங்களே ஆபீசர்ஸ்...!
ADDED : ஜன 27, 2024 12:00 AM
திருப்பூர்: குடியரசு தின விழா ஏற்பாட்டில், முறையான இருக்கை வசதி செய்யாமல், வருவாய்த்துறையினர் சொதப்பி விட்டனர்.
திருப்பூர் மாவட்ட வருவாய்த்துறை சார்பில், சிக்கண்ணா கல்லுாரி மைதானத்தில் குடியரசு தின விழா நேற்று நடைபெற்றது. விழா நிகழ்வுகளை பார்வையிட ஏதுவாக, கல்லுாரி மைதானத்தில் மேடை அமைக்கப்பட்டிருந்தது. கலெக்டர் உட்பட அரசு துறை உயர் அதிகாரிகள், வி.ஐ.பி.,க்கள் அமர்வதற்காக, மேடையில் ஷோபா போடப்பட்டிருந்தது.
மேடைக்கு வலதுபுறம் சுதந்திர போராட்ட தியாகிகள்; இடதுபுறம் பத்திரிகையாளர் மற்றும் அரசு அலுவலர்கள் அமர்வதற்கு சாமியான பந்தல் அமைக்கப்பட்டிருந்தது.
ஆனால், பந்தலுக்குள் சேர் போட மறந்துவிட்டனர். இதனால், சுதந்திர போராட்ட தியாகிகள்; பாராட்டு சான்றுகள் பெறுவதற்காக வந்தோர் உட்பட அரசு அலுவலர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் கால்கடுக்க நின்றுகொண்டே விழா நிகழ்வுகளை பார்க்கவேண்டிய நிலை ஏற்பட்டது. முதுமை, கால்வலி காரணமாக, சுதந்திர போராட்ட தியாகிகள் மற்றும் தியாகிகளின் வாரிசுகள் சிலர், வேறுவழியின்றி, மேடையில் ஏறி, ஷோபாவில் அமர்ந்தனர்.
தேசிய கொடி ஏற்றப்பட்டு, போலீசார் அணிவகுப்பு நடந்து கொண்டிருந்த போதுதான், பிளாஸ்டிக் சேர்கள் வாகனங்களில் வந்திறங்கின. அவசரகதியில் பந்தலுக்குள் சேர்கள் போடப்பட்டு, அனைவரும் அமர வைக்கப்பட்டனர்.
கலை நிகழ்ச்சிகள், கணபதிபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்களின், நாட்டுப்புற நடனத்துடன் துவங்கியது. மாணவர்கள் உத்வேகமாக நடனமாடி கொண்டிருந்த போது, திடீரென ஒலிபெருக்கியில் பழுது ஏற்பட்டு, பாடல் பாதியிலேயே நின்றுவிட்டது.
தொழில்நுட்ப கோளாறு சரி செய்யப்பட்டு, ஐந்து நிமிடங்களுக்குப்பின் மீண்டும் முதலில் இருந்து பாடலுக்கு மாணவர்கள் நடனமாடினர். குடியரசு தின விழா ஏற்பாடுகளை, வருவாய்த்துறை அலுவலர்கள் சிறப்பாக செய்திருந்தனர். ஆனாலும், முறையாக இருக்கை வசதி ஏற்படுத்தாதது, சவுண்ட் சிஸ்டம் கோளாறு ஆகியன பார்வையாளர்களை முகம்சுழிக்க செய்துவிட்டது. வரும் காலங்களில், இதுபோன்ற தவறுகள் தவிர்க்கப்பட வேண்டும்.

