/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பெயின்டராக மாறிய தலைமையாசிரியர்
/
பெயின்டராக மாறிய தலைமையாசிரியர்
ADDED : ஜன 26, 2024 12:55 AM
உடுமலை;உடுமலை அருகே அரசு பள்ளி தலைமையாசிரியர், பள்ளி வளாகத்தில், தன் கைபட வர்ணம் பூசி அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி வருகிறார்.
உடுமலை அருகே, லிங்கமாவூர் அரசு பழங்குடியினர் உண்டு உறைவிடப்பள்ளி உள்ளது. இப்பள்ளியின் தலைமையாசிரியராக அய்யப்பன் பணிபுரிந்து வருகிறார்.
பள்ளியில் பயிலும் பழங்குடியின மாணவ, மாணவியரின் கற்றல் திறனை மேம்படுத்தும் வகையில், பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.
அவ்வகையில், பள்ளியை புதுப்பொலிவாக்க திட்டமிட்ட தலைமையாசிரியர், தனியார் பங்களிப்பு உதவியுடன் அதற்கான பணிகளை மேற்கொண்டுள்ளனர். பள்ளி வளாகம் முழுவதும் வர்ணம் பூசி, அனைவரது கவனத்தையும் ஈர்க்கிறார்.
குறிப்பாக, பள்ளி வளாகத்திற்குள் அமைக்கப்பட்டுள்ள விளையாட்டு உபகரணங்கள், சுற்றுச்சுவர், வகுப்பறைகளில் அவரே தன் கைப்பட வர்ணம் பூசி வருகிறார்.
இது குறித்து அவர் கூறியதாவது: நகரில் இருந்து, தொலைதுாரத்தில் அமைந்துள்ள மலை கிராம பள்ளிக்கு, வர்ணம் பூச பெயின்டர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டால், உணவு, போக்குவரத்து செலவு மற்றும் தினக்கூலி வழங்க வேண்டியுள்ளது.
செலவினங்களை குறைத்து, பள்ளி வளாகத்தை துாய்மையாக வைத்திருப்பதுடன், மாணவர்கள் கல்வி கற்க நல்ல சூழலை ஏற்படுத்த திட்டமிடப்பட்டது. இதற்காக, ஆயத்தப்பணி மேற்கொள்ளப்பட்டு, தனியார் பங்களிப்புடன் வர்ணம் பூசி வருகிறேன்.
அரசுப்பள்ளியில் சேர்வதற்கு முன், பெயின்டராக பணிபுரிந்த அனுபவம் உள்ளது. அதனால் மாலை நேரத்தில் பள்ளி வளாகத்தில் வர்ணம் பூசும் பணியில் ஈடுபடுகிறேன். இவ்வாறு, அவர் கூறினார்.

