/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பஞ்சலிங்க அருவிக்கு 9 நாட்களுக்கு பின் அனுமதி
/
பஞ்சலிங்க அருவிக்கு 9 நாட்களுக்கு பின் அனுமதி
ADDED : ஜூன் 03, 2025 12:26 AM

உடுமலை; உடுமலை திருமூர்த்திமலை பஞ்சலிங்க அருவிக்கு, 9 நாட்களுக்கு பின் சுற்றுலா பயணியர் நேற்று அனுமதிக்கப்பட்டனர்.
உடுமலை அருகேயுள்ள திருமூர்த்திமலையில், மலைமேல் பஞ்சலிங்க அருவி மற்றும் மலையடிவாரத்தில் தோணியாற்றின் கரையில், சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகியோர் ஒருங்கே அமைந்துள்ள அமணலிங்கேஸ்வரர் கோவில், அணை, நீச்சல் குளம் என சுற்றுலா மற்றும் ஆன்மிக மையமாக உள்ளது.
பல்வேறு மாவட்டங்களிலிருந்து தினமும் ஏராளமான சுற்றுலா பயணியர், பக்தர்கள் வந்து செல்கின்றனர். திருமூர்த்திமலைப்பகுதிகளில், கனமழை பெய்து, அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், கடந்த, 24ம் தேதி முதல், பஞ்சலிங்கம் அருவிக்கு செல்ல தடை விதிக்கப்பட்டது.
தோணியாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதை பொருத்து, கோவிலில் மும்மூர்த்திகளை தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வந்தனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் மழை குறைந்து, அருவியில் சீரான அளவு நீர்வரத்து காணப்பட்டது. இதனையடுத்து, 9 நாட்களுக்கு பின் பஞ்சலிங்கம் அருவியில் குளிக்க பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது.
ஏராளமான மக்கள் அருவியில் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர். அதே போல், கோவிலில் வழக்கமாக பூஜைகள் நடந்த நிலையில், ஏராளமான பக்தர்கள் மும்மூர்த்திகளை வழிபட்டனர்.